மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அதிரடி; 1915 இலவச எண் மற்றும் ஒருங்கிணைந்த குறைதீர் போர்ட்டல் மூலம் புகாரளிக்கலாம்!
மத்திய அரசு அமல்படுத்தியுள்ள ஜி.எஸ்.டி. வரிக்குறைப்பின் பலன்கள் பொதுமக்களுக்கு முழுமையாகச் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், மத்திய நுகர்வோர் விவகாரத்துறை ஒரு சிறப்பு ஏற்பாட்டைச் செய்துள்ளது. ஜி.எஸ்.டி. வரி குறைப்பின் பலனை வாடிக்கையாளர்களுக்கு அளிக்காத நிறுவனங்கள் மீது, இனி பொதுமக்கள் உடனடியாகப் புகார் அளிக்கலாம் என அறிவித்துள்ளது. இது, ஏமாற்று நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க உதவும் ஒரு அதிரடி நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
ஜி.எஸ்.டி. வரிக்குறைப்பு தொடர்பாகப் புகார் அளிக்க விரும்பும் வாடிக்கையாளர்கள், 1915 என்ற இலவச தொலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டு தங்கள் புகார்களைப் பதிவு செய்யலாம். மேலும், மத்திய அரசின் ஒருங்கிணைந்த குறைதீர் போர்ட்டல் மூலமாகவும் புகார்களைப் பதிவு செய்ய முடியும். இந்தச் சேவை, தமிழ் உட்பட 17 இந்திய மொழிகளில் செயல்படுவதால், நாட்டின் அனைத்துப் பகுதி மக்களும் எளிதாகப் பயன்படுத்த முடியும்.
மக்களின் அன்றாட வாழ்வில் வரி குறைப்பின் நேரடிப் பலன்களைக் கொண்டு சேர்ப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் என அரசு தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை, நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதுடன், பொருளாதாரச் சுணக்கத்தையும் போக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.