80 கிலோ தங்க நகைகள் மத்திய வங்கிக்கு மாற்றம்; உரிமையாளர்களைக் கண்டறியும் பணியில் குற்றப்புலனாய்வுத் துறை!
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பின் சட்டவிரோத வங்கிகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 80 கிலோவுக்கு அதிகமான தங்க நகைகளை உரிய உரிமையாளர்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. இது தொடர்பாகக் குற்றப் புலனாய்வுத் துறை (CID) கொழும்பு நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
மனிதாபிமான நடவடிக்கைகளின்போது இலங்கை ராணுவத்தால் கைப்பற்றப்பட்ட இந்த 6,000-க்கும் மேற்பட்ட தங்க நகைகள், இலங்கை மத்திய வங்கியின் பாதுகாப்புப் பெட்டகங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. நீதிமன்ற உத்தரவின் பேரில், நகைகளின் எடை, தரம் மற்றும் மதிப்பு ஆகியவற்றை மதிப்பிடுவதற்குத் தேசிய ரத்தினம் மற்றும் நகைகள் அதிகாரசபை நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த மதிப்பீட்டுப் பணிகளைச் சிரமமின்றி மேற்கொள்வதற்காக, ராணுவத் தலைமையகத்தில் தேசிய ரத்தினம் மற்றும் நகைகள் அதிகாரசபையின் தற்காலிக அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் முடிந்ததும், நகைகளை அடமானம் வைத்தவர்கள் அல்லது உரிமையாளர்களை அடையாளம் காணும் பணியை குற்றப் புலனாய்வுத் துறை தொடங்கும்.
இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும், அந்த நகைகள் பொதுமக்கள் தாமாக முன்வந்து அளித்தவையா அல்லது விடுதலைப் புலிகளால் கட்டாயமாகப் பறிமுதல் செய்யப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் சிஐடி தெரிவித்துள்ளது.