தனியார் செய்தி சேனல், ஜி.எஸ்.டி., வானிலை மையம், சுங்கத்துறை அலுவலகங்களுக்கு மிரட்டல்; அனைத்தும் புரளி என உறுதி!
சென்னையில் ஒரே நாளில் நான்கு முக்கிய அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த மிரட்டல்கள் அனைத்தும் புரளி எனப் போலீசார் நடத்திய சோதனையில் தெரியவந்துள்ளது.
வெடிகுண்டு மிரட்டல்
சென்னையில் இன்று காலை, பெருங்குடியில் இயங்கி வரும் தந்தி டிவி தனியார் செய்தி சேனல் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. கட்டுப்பாட்டு அறைக்கு வந்த ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்த வெடிகுண்டு தடுப்புப் போலீசார், மோப்பநாய்கள் உதவியுடன் அலுவலகம் முழுவதும் தீவிர சோதனை நடத்தினர். சோதனையில் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படாததால், இந்த மிரட்டல் ஒரு புரளி என்பது உறுதியானது.
ஜி.எஸ்.டி. மற்றும் வானிலை ஆய்வு மைய அலுவலகங்கள்
அதன் பின்னர், நுங்கம்பாக்கம் மகாத்மா காந்தி சாலையில் உள்ள சென்னை ஜி.எஸ்.டி. தலைமை அலுவலகம் மற்றும் வானிலை ஆய்வு மைய அலுவலகம் ஆகியவற்றுக்குக் கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அங்கும் சோதனை நடத்தினர். இந்த மிரட்டல்களும் புரளி என உறுதி செய்யப்பட்டது.
சுங்கத்துறை அலுவலகத்திற்கு இரண்டாவது மிரட்டல்
இதேபோல், சுங்கத்துறை அலுவலகத்திற்கும் மின்னஞ்சல் (இ-மெயில்) மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன் இதேபோல மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், இது இரண்டாவது முறையாக நடந்துள்ளது. மேலும், இன்று விடுமுறை நாளிலும் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த மிரட்டல் விடுத்தது யார் என்பது குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.