தமிழகத்தில் மக்களுக்குப் பாதுகாப்பில்லை; சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தது; திமுக குடும்ப அரசியல் நடத்துகிறது என்று எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டியுள்ளார்.
மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ள அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் நடந்த பொதுக்கூட்டத்தில் தி.மு.க. அரசுக்கு எதிராகப் பல கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அவர் பேசும்போது, இன்று தமிழகத்தில் வெடிகுண்டுக் கலாச்சாரம் வந்துவிட்டது. மக்களுக்குப் பாதுகாப்பில்லை, என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.
தனது குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக அவர் சில சம்பவங்களைச் சுட்டிக்காட்டினார். சென்னை டிஜிபி அலுவலகம் முன்பு ஏர்போர்ட் மூர்த்தி என்பவர் கடுமையாகத் தாக்கப்பட்டதை போலீஸ் வேடிக்கை பார்க்கிறது. ஆடுதுறை பேரூராட்சித் தலைவர்மீது பட்டப்பகலில் வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது, என்று அவர் கூறினார். மேலும், கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை இல்லாத நாளே இல்லை என்றும் அவர் சாடினார்.
தி.மு.க.வை ஒரு குடும்பக் கம்பெனியென விமர்சித்த அவர், கருணாநிதி ஓனராக இருந்தார், இப்போது ஸ்டாலின் அதிபராகிவிட்டார், உதயநிதி வருவதற்குத் துடிக்கிறார். உதயநிதி என்ன சேவை செய்தார்? போராட்டம் நடத்தி ஜெயிலுக்குப் போயிருக்கிறாரா? என்று கேள்வி எழுப்பினார். உழைப்பவர்களுக்கு தி.மு.க.வில் முக்கியத்துவம் இல்லை எனவும், அமைச்சர் பெரியசாமி போன்றோர் ஓரங்கட்டப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், உள்ளாட்சி அமைப்புகளின் நிதியைத் தி.மு.க. அரசு வேறு பணிகளுக்குப் பயன்படுத்துவதாக அவர் குற்றம்சாட்டினார். இது மக்களை வஞ்சிக்கும் செயல். உள்ளாட்சி நிதியை வேறு பணிக்குச் செயல்படுத்திய எந்த அரசும் இருந்ததில்லை, என்று அவர் கடும் கண்டனம் தெரிவித்தார். தி.மு.க.வைச் சேர்ந்த ஒரு ஊராட்சி மன்றத் தலைவரே பேருந்தில் 4 பவுன் நகை திருடியதாகவும், அவர்மீது ஏற்கனவே பல வழக்குகள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டி, தி.மு.க.வின் நிலைமையைச் சாடினார்.
"ஆனால், அ.தி.மு.க.வில் 100 நாள் வேலைத்திட்டத்தில் பணிபுரிந்த ஒரு பெண் எம்எல்ஏ ஆகியிருக்கிறார். பெயின்ட் அடிப்பவர் எம்எல்ஏ ஆகியிருக்கிறார். ஏழைகளையும் எம்எல்ஏவாகத் தேர்வு செய்யும் ஒரே கட்சி அ.தி.மு.க.தான்," என்று அவர் தனது கட்சியின் பெருமைகளைப் பட்டியலிட்டார்.