ஆம்பூர் அருகே 5-ஆம் வகுப்பு மாணவிக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த தலைமை ஆசிரியர்மீது, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
கற்பிக்கும் புனிதமான இடம், மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும் ஆலயம் என்று போற்றப்படும் பள்ளிக்கூட வளாகமே ஒரு கொடூரனின் கைகளால் களங்கப்படுத்தப்பட்டுள்ளது.
ஆம்பூர் அருகே உள்ள மேல் சாணாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு மாணவிக்குத் தலைமை ஆசிரியர் பாரத் அம்பேத்கர் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்த கொடூரமான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் மத்தியில் பெரும் கோபத்தையும் கொந்தளிப்பையும் இந்தச் சம்பவம் ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தன்று, குடிபோதையில் தள்ளாடியபடி பள்ளிக்கு வந்த தலைமை ஆசிரியர் பாரத் அம்பேத்கர், ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவியைக் கொடூரமாக மிரட்டித் தன் மடியில் அமர வைத்துப் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளார். இந்த அருவருப்பான காட்சியைப் பார்த்த சில கிராம மக்கள், அதைத் தங்கள் செல்போன்களில் வீடியோவாகப் பதிவு செய்து, உடனடியாக மாவட்டக் கல்வி அலுவலகத்துக்குப் புகார் அளித்துள்ளனர். மக்களின் பொறுப்புணர்ச்சியால் இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
புகாரின் பேரில், மாதனூர் வட்டாரக் கல்வி அலுவலர்கள் பீட்டர் மற்றும் முருகேசன் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது மக்கள் தாங்கள் பதிவு செய்த வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களை அதிகாரிகளிடம் காட்டியுள்ளனர். ஆனால், வட்டாரக் கல்வி அலுவலர்கள் அந்த ஆதாரங்களைச் சரிவரப் பயன்படுத்தாமல், ஆசிரியர்மீது உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறி, மக்களின் செல்போனில் இருந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அழித்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் செயல் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்களை அலட்சியப்படுத்திய அதிகாரிகளின் செயல் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
இந்தக் கொடூரமான ஆசிரியர் ஏற்கனவே பல பள்ளிகளில் இதே போன்ற பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர் என்பது மேலும் அதிர்ச்சியளிக்கிறது. பேரணாம்பட்டு, அரவட்லா, மாதனூர், காட்டு வெங்கடாபுரம், சம்பந்திகுப்பம், பள்ளவல்லி ஆகிய பகுதிகளில் பணிபுரிந்தபோது இதே போன்ற குற்றங்களுக்காகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, கடந்த 15 நாட்களுக்கு முன்புதான் மேல் சாணாங்குப்பம் பள்ளிக்கு மீண்டும் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மீண்டும் ஒரு மாணவியின் எதிர்காலத்தோடு விளையாடிய இந்த மனிதநேயமற்ற செயல், அதிகாரிகளின் அலட்சியப் போக்கிற்குச் சான்றாக உள்ளது. மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் மலைவாசன் அளித்த புகாரின் அடிப்படையில், உமராபாத் காவல்துறையினர் தலைமை ஆசிரியர் பாரத் அம்பேத்கரை போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து, தலைமை ஆசிரியர் பாரத் அம்பேத்கர் நிரந்தரமாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஒரு கொடூரக் குற்றவாளியை மீண்டும் பணிக்கு அமர்த்திய பின்னணி குறித்த விசாரணைக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.