நிலப் பட்டா NOC-க்காக ஐந்தாயிரம் லஞ்சம்; இடைத்தரகராகச் செயல்பட்ட ஓட்டுநர் கைது!
சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், இடைத்தரகராகச் செயல்பட்டு லஞ்சம் வாங்கியதாக, எடப்பாடி வட்டாட்சியரின் கார் ஓட்டுநர் கையும் களவுமாகப் பிடிபட்டார். இந்தச் சம்பவம் அந்த அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கொங்கணாபுரம் ஒன்றியம், கோரணம்பட்டி ஊராட்சி, மூலப்பாதை பகுதியைச் சேர்ந்த தமிழரசு என்பவர், தனது பட்டா நிலத்திற்கு தடையில்லாச் சான்றிதழ் (NOC) கேட்டு எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள நில அளவை பிரிவில் மனு அளித்திருந்தார்.
இந்தச் சான்றிதழ் வழங்க, நில அளவை பிரிவு தனி தாசில்தார் கோவிந்தராஜன் ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். பேரம் பேசிய பின்னர் ரூ.5 ஆயிரம் தருவதாக தமிழரசு ஒப்புக்கொண்டுள்ளார். அப்போது, அந்தப் பணத்தை வட்டாட்சியரின் கார் ஓட்டுநர் வெங்கடாஜலத்திடம் கொடுக்குமாறு தாசில்தார் கூறியுள்ளார்.
இதற்கு மறுப்புத் தெரிவித்த தமிழரசு, சேலம் லஞ்ச ஒழிப்புப் போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரம் பணத்தை அவரிடம் கொடுத்து அனுப்பினர். தமிழரசு அந்தப் பணத்தை வட்டாட்சியரின் கார் ஓட்டுநரான வெங்கடாஜலத்திடம் கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப் போலீசார் வெங்கடாஜலத்தை கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர். மேலும், இந்த விவகாரத்தில் லஞ்சம் கேட்ட நில அளவை தாசில்தார் கோவிந்தராஜிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.