தாம்பரம் அருகே வீடியோ வெளியாகி பரபரப்பு; கடைக்கு ₹200 வசூல் என வியாபாரிகள் குற்றச்சாட்டு!
சென்னை, தாம்பரம் அருகே மேடவாக்கம் மேம்பாலத்தின் கீழ் சாலையோரக் கடைக்காரர்களிடம் போலீசார் மாமூல் வசூலிக்கும் வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
சம்பந்தப்பட்ட வீடியோவில், இரு காவலர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து, சாலையோரத்தில் கடை வைத்திருக்கும் வியாபாரிகளிடம் பணம் வாங்குவது தெளிவாகப் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவைச் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்தச் சம்பவம் குறித்துக் கடைக்காரர்களிடம் விசாரித்தபோது, தினமும் மாலை நேரத்தில் இரண்டு காவலர்கள் வந்து, கடைக்குத் தலா ரூ. 200 வீதம் பணம் வசூலித்துச் செல்வதாகப் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளனர்.
காவல்துறையின் இந்தப் பணம் வசூலிக்கும் விவகாரம், பொதுமக்கள் மத்தியில் கடும் கண்டனத்தைப் பெற்றுள்ளது. லஞ்சம் வாங்கும் காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இது போன்ற சம்பவங்கள் தொடராமல் தடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.