அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மாடுகள் மீது மோதல்; வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி!
சென்னை, கிழக்கு கடற்கரைச் சாலை (ECR) கானாத்தூர் பகுதியில் இன்று அதிகாலையில் நடந்த விபத்தில், சாலையோரம் படுத்திருந்த மாடுகள் மீது மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், விபத்தில் உயிரிழந்தவர் ஹெல்மெட் அணியாததே உயிரிழப்புக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஜாக்கப் வர்கீஸ் (23) என்பவர், அங்கு ஒரு மலையாளப் பத்திரிகையில் பணியாற்றி வந்தார். கல்லூரி அரியர் தேர்வை எழுதுவதற்காகச் சென்னைக்கு வந்த அவர், இன்று அதிகாலையில் தனது நண்பர் ஜஸ்வந்த் என்பவருடன் கானாத்தூர் பேருந்து நிறுத்தம் அருகில், இருசக்கர வாகனத்தில் அதிவேகமாகச் சென்றுள்ளார். அப்போது, சாலையின் தவறான பக்கத்தில் வந்த அவர்களின் பைக், சாலையோரம் படுத்திருந்த மாடுகள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட ஜாக்கப், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பைக்கில் வந்த இருவரும் தலைக்கவசம் அணியவில்லை என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் ஒரு மாடும் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்துப் பள்ளிக்கரணை போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.