சைபர் கிரைம் வழக்கில் அதிரடித் தீர்ப்பு: குற்றவாளிக்கு ₹55,000 அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவு; பெண்களுக்கு வலுவான செய்தியை வெளியிட்ட காவல் துறை!
19 வயது இளம்பெண் ஒருவர், ஆன்லைன் செயலி மூலம் தனக்கு அறிமுகமான தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ஆசிப் (வயது 25) என்பவருடன் நட்பின் பேரில் தனது தனிப்பட்ட பதிவுகளைப் பகிர்ந்திருந்தார். ஆனால், அந்த ஆசிப், அந்தப் பெண்ணைத் தொடர்ந்து துன்புறுத்தி, ஆபாச வீடியோக்களை அனுப்புமாறு மிரட்டியுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் கடந்த 02.02.2024 அன்று அளித்த புகாரின் பேரில், சென்னை பெருநகரக் காவல், மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, எதிரி முகமது ஆசிப் உடனடியாகக் கைது செய்யப்பட்டார்.
சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் ஆ.அருண், உத்தரவின் பேரில், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையாளர் A. ராதிகா, இ.கா.ப அவர்களின் ஆலோசனையுடன், மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான சிறப்புக் குழுவினர் துரிதமாகப் புலனாய்வு செய்தனர். வழக்கில் சாட்சிகள் மற்றும் ஆதாரங்களை முறையாக ஆஜர்படுத்தியதன் பேரில், சைதாப்பேட்டை, 11-வது பெருநகரக் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நிறைவடைந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்ட எதிரி முகமது ஆசிப்புக்கு, தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 66 D-ன் கீழ் 2 வருடங்கள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ₹50,000 அபராதமும், இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 354 D-ன் கீழ் 2 வருடங்கள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ₹5,000 அபராதமும் என, இரு தண்டனைகளையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அபராதம் கட்டத் தவறினால் கூடுதல் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தக் கிடைத்த நீதி குறித்துச் சிறப்பாகச் செயல்பட்ட காவல் குழுவினரை உயர் அதிகாரிகள் வெகுவாகப் பாராட்டினர்.
மேலும், இத்தீர்ப்பின் பின்னணியில், பொதுமக்கள் அனைவரையும், குறிப்பாகப் பெண்கள் மற்றும் இளம் இணையப் பயனாளர்களை, டிஜிட்டல் தளங்களில் அறிமுகமில்லாத யாருடனும் தங்களின் தனிப்பட்ட தகவல்களை ஒருபோதும் பகிர வேண்டாம் என்று காவல் ஆணையாளர் ஆ.அருண், இ.கா.ப., அவர்கள் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார். சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் அச்சமோ, தயக்கமோயின்றி உடனடியாகத் தேசிய இணையவழி குற்றத்தடுப்பு உதவி எண் 1930 அல்லது இணையதளம் மூலமாகப் புகார் அளிக்கலாம் என்றும் சென்னை பெருநகர காவல்துறை சார்பாகக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.