ஆன்லைன் பழக்கத்தால் அரங்கேறிய கொடுமை; ஒரு சிறுமி கர்ப்பமானதால் அம்பலமான பயங்கரம்; காவல்துறை அதிரடி!
செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி பகுதியில் பாட்டியுடன் வசித்து வந்த 13 மற்றும் 15 வயது சகோதரிகள், சமூக வலைத்தளங்கள் மூலமாக இளைஞர்கள் இருவருடன் பழக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர். முருக்கமங்கலத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் தினேஷ் (22) மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த ஏசி மெக்கானிக் தினேஷ் (23) ஆகிய இருவரும், சகோதரிகளை ஆசை வார்த்தைகள் கூறி மாமல்லபுரம் அருகேயுள்ள காயர் பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தக் கொடுமைக்கு ஆளான மூத்த சிறுமி உடல்நலம் பாதிக்கப்பட்டதால், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு, அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்ததை அடுத்து, இரு சிறுமிகளும் நடந்த அக்கிரமத்தைப் பாட்டியிடம் அழுதுள்ளனர். உடனடியாக, மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு, காட்டாங்கொளத்தூர் அருகே பதுங்கியிருந்த இரண்டு தினேஷ்களையும் திங்கட்கிழமை இரவு கைது செய்தனர். பின்னர், அவர்கள் செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு மருத்துவப் பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன.