பாமகவில் ராமதசுக்கு முழு அதிகாரம்.. நிறுவனராகவும், தலைவராகவும் தொடர்வார்.. பொதுக்குழுவில் தீர்மானம்!
விழுப்புரத்தில் நடைபெற்ற பாமக பொதுக்குழுவில் 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில், குறிப்பாகப் பாமகவின் நிறுவனராகவும், தலைவராகவும் ராமதாஸ் மட்டுமே தொடர்வாரென முக்கியமான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) பொதுக்குழு கூட்டம், விழுப்புரம் மாவட்டம், பட்டானூரில் இன்று அதன் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கட்சியின் நிறுவனர் ராமதாஸ், பாமகவின் தலைவராகவும், நிறுவனராகவும் தொடர்ந்து செயல்படுவாரென ஒரு முக்கியத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது, கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் உடனான தலைமைகுறித்த விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது.
பட்டானூரில் உள்ள சங்கமித்ரா திருமண நிலையத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், ராமதாஸ் தனது தைலாபுரம் இல்லத்திலிருந்து புறப்பட்டு வந்து பங்கேற்றார். அவரது மூத்த மகள் காந்திமதி, பேரன் முகுந்தன் ஆகியோரும் மேடையில் உடனிருந்தனர். மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் என 4,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில், மொத்தம் 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிறைவேற்றப்பட்ட முக்கியத் தீர்மானங்கள்:
தலைமைப் பொறுப்பு: கட்சி அமைப்பு விதிகளின்படி, டாக்டர் ராமதாஸ் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவராகச் செயல்படுவாரென ஒருமனதாக அங்கீகரிக்கப்பட்டது. இதுவே கூட்டத்தின் மிக முக்கியமான தீர்மானமாக அமைந்தது.
கூட்டணிக்கு முழு அதிகாரம்:
வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில், பாமக அதிக இடங்களில் வெற்றி பெற உரிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, வெற்றிக் கூட்டணியை உருவாக்க டாக்டர் ராமதாசுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டது.
சமூகநீதி:
* வன்னியர்களுக்கான 10.5% தனி இட ஒதுக்கீட்டை மீண்டும் போராடிப் பெறுவோம்.
* ஜாதி வாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும்.
* முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
சமூகப் பாதுகாப்பு:
* தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.
* கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
* உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் நீதி போதனை வகுப்புகள் தொடங்க வேண்டும்.
* தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் குடிசை வீடுகளுக்கும் கழிப்பறை கட்டித் தர வேண்டும்.
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு:
* அரசுப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்களை நியமனத் தேர்வு மூலம் உடனடியாக நிரப்ப வேண்டும்.
* பின்தங்கிய வட மாவட்டங்களின் கல்வி வளர்ச்சிக்கு அரசுச் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
* வேலையில்லாத் திண்டாட்டத்தை போக்க, படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.
வர்த்தகம் மற்றும் உள்கட்டமைப்பு:
* உற்பத்திப் பொருட்களுக்குக் கட்டுபடியான விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.
* ஒகேனக்கல் பகுதி நீரேற்று மூலம் தர்மபுரி - காவிரி உபரிநீர் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
* நந்தன் கால்வாய் திட்டத்தைக் காலம் தாழ்த்தாமல் நிறைவேற்ற வேண்டும்.
* காவிரி உள்ளிட்ட அனைத்து ஆறுகளிலும் 5 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்ட வேண்டும்.
* சுங்கச்சாவடி கட்டணங்களைக் குறைக்க வேண்டும்.
பிற முக்கிய கோரிக்கைகள்:
* கச்சத்தீவை மீண்டும் இந்தியாவிற்குள் கொண்டுவர வேண்டும்.
* நெய்வேலி என்.எல்.சி. நிலக்கையகப்படுத்துதலை கைவிட்டு, நிலம் கொடுத்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.
* புதுச்சேரிக்கு முழுமையான மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்.
* நீட் தேதேர்விலிருந்துதமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும்.
* அரசுப் போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
* தமிழ்நாடு மின்சார வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்.
* இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண நடுவண் அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இந்தத் தீர்மானங்கள் அனைத்தும் ஒருமனதாக அங்கீகரிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.