"மூளையை தின்னும் அமீபா தொற்று நோய் அல்ல" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!
கேரளா தொற்று குறித்து தமிழக மக்கள் அச்சப்பட தேவையில்லை! - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!
அண்டை மாநிலமான கேரளாவில் வேகமாகப் பரவி வரும் 'மூளையைத் தின்னும் அமீபா' (Brain-eating amoeba) தொற்று தமிழகத்தில் பரவுமா என்ற அச்சம் பொதுமக்களிடையே நிலவி வந்த நிலையில், இந்த நோய் குறித்துச் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், "மூளையை தின்னும் அமீபா பாதிப்பு என்பது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்குப் பரவும் தொற்று நோய் அல்ல. இதனால், கேரளாவிலிருந்து வருபவர்களால் இந்த நோய் பரவும் என்ற அச்சம் யாருக்கும் வேண்டாம்" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
நோய் பாதிப்புக்கான காரணம்
மாசடைந்த நீர்நிலைகளில் குளிக்கும்போது இந்த அமீபா மூக்கு வழியாக மூளைக்குச் சென்று பாதிப்பை ஏற்படுத்துவதாக அமைச்சர் கூறினார். எனவே, சுத்தமான நீரை மட்டும் பயன்படுத்த வேண்டும் எனவும், அசுத்தமான நீர்நிலைகள் மற்றும் நீச்சல் குளங்களில் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். நீச்சல் குளங்களில் தண்ணீரை அடிக்கடி மாற்றி, சுகாதாரமான முறையில் பராமரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
கேரளா நிலவரம்
கேரளாவில் கோழிக்கோடு மாவட்டத்தில் 9 வயது சிறுமி இந்த அமீபா தொற்றால் உயிரிழந்தது கண்டறியப்பட்டது. இதுவரை, திருவனந்தபுரம், கொல்லம், கோழிக்கோடு, வயநாடு, மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 18 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதன் காரணமாக, கேரளாவில் சுகாதாரத்துறை அதிகாரிகள் கிணறுகள் மற்றும் நீர் தொட்டிகளைச் சுத்தம் செய்து வருகின்றனர். வீடுகள் மற்றும் நிறுவனங்களில் உள்ள தண்ணீர் தொட்டிகளை ஆகஸ்ட் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் சுத்தம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
