சண்டிகர் - குலு நெடுஞ்சாலையில் 50 கி.மீ-க்கு போக்குவரத்து நெரிசல்! நிலச்சரிவு மற்றும் கனமழையால் ஆயிரக்கணக்கான வாகனங்கள் ஸ்தம்பிப்பு!
டெல்லிக்குச் செல்லும் ₹50 கோடி மதிப்புள்ள ஆப்பிள் அழுகும் அபாயம்! மாற்று வழிப்பாதைகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டதால் பெரும் பாதிப்பு!
ஹிமாச்சலப் பிரதேசத்தின் சண்டிகர் - குலு நெடுஞ்சாலையில் கனமழை மற்றும் தொடர் நிலச்சரிவு காரணமாக, சுமார் 50 கி.மீ தூரத்திற்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், காய்கறி, பழங்கள் ஏற்றிச் செல்லும் நூற்றுக்கணக்கான லாரிகள் உட்பட ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்த 48 மணி நேரத்திற்கும் மேலாகச் சாலையில் சிக்கித் தவிக்கின்றன.
இந்த நெடுஞ்சாலையில் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டதால், அத்தியாவசியப் பொருட்களின் போக்குவரத்து முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மாண்டி மற்றும் குலுவுக்கு இடைப்பட்ட பகுதியில், சாலைகள் உடைந்து, பல இடங்கள் துண்டிக்கப்பட்டுள்ளதால் கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ரூபாய் 50 கோடி மதிப்பிலான ஆப்பிள்கள் பாதிப்பு
போக்குவரத்து நெரிசலில் சிக்கியிருக்கும் லாரி ஓட்டுநர்கள் பெரும் கவலையில் உள்ளனர். டெல்லி-என்சிஆர் பகுதிக்குக் கொண்டு செல்லப்படும் ஆப்பிள், தக்காளி மற்றும் பிற காய்கறிகள் உள்ளிட்ட கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் அழுகி வருவதாக அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு லாரியிலும் சுமார் ₹4 முதல் ₹4.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் ஏற்றப்பட்டுள்ளன. இதில், ஆப்பிள்கள் மட்டும் ₹50 கோடிக்கும் அதிகமாக மதிப்பிடப்படுகிறது. இந்த தொடர் மழையால் பியாஸ் ஆறு பெருக்கெடுத்து ஓடுவதால் சாலைகளை மீட்டெடுக்கும் பணியில் கடும் தொய்வு ஏற்பட்டுள்ளது.
சிறிய வாகனங்களுக்கு மட்டும் ஓரளவு வழித்தடம் திறக்கப்பட்டாலும், சரக்கு லாரிகள் தொடர்ந்து அதே இடத்தில் சிக்கியுள்ளன.
