ஆணவக்கொலைக்கு எதிரான 'பரிதாபங்கள்' காணொளி: கோபி - சுதாகருக்கு ஆதரவாகத் திராவிடர் விடுதலைக் கழகம் புகார்!
சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமான பரிதாபங்கள் என்ற யூடியூப் சேனலை நடத்தி வரும் கோபி மற்றும் சுதாகர், சமூகத்தில் நடக்கும் ஆணவக் கொலைகளை மையமாக வைத்து Society Parithapangal என்ற காணொளியை வெளியிட்டனர்.
இந்தக் காணொளிக்குச் சமூகத்தில் சில சாதி வெறி கும்பல்களால் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அந்தக் கும்பல்கள் கோபி மற்றும் சுதாகருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். குறிப்பாக, சவுத்ரி தேவர் என்பவர் நேரடியாகக் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இவர்களுக்கு எதிராக வரும் அச்சுறுத்தல்களைக் கண்டித்து, திராவிடர் விடுதலைக் கழகம், கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் மனுவை அளித்துள்ளது. அந்த மனுவில், கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது உடனடியாகச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், திராவிடர் விடுதலைக் கழகத்தினர் கோபி மற்றும் சுதாகருக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரியார், அண்ணா விருதுகளைப் போலச் சமூக அக்கறையுள்ள காணொளிகளை உருவாக்கி வரும் கோபி மற்றும் சுதாகரின் சமூகப் பங்களிப்பைப் பாராட்டி, தமிழக அரசு அவர்களுக்கு எம்.ஆர்.ராதா விருது வழங்கிக் கௌரவிக்க வேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்தக் கோரிக்கைகள் சமூக வலைதளங்களில் பெரும் ஆதரவைப் பெற்று வருகின்றன. ஆணவக் கொலைகளுக்கு எதிராகக் கருத்து தெரிவித்ததற்காக இரு கலைஞர்கள் மிரட்டப்படுவது குறித்து பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.