திரும்பப் பெறப்பட்ட புதிய வருமான வரி மசோதா! திருத்தப்பட்ட சட்டம் விரைவில் தாக்கல்..  மத்திய அரசு அறிவிப்பு!

திரும்பப் பெறப்பட்ட புதிய வருமான வரி மசோதா! திருத்தப்பட்ட சட்டம் விரைவில் தாக்கல்.. மத்திய அரசு அறிவிப்பு

மத்திய அரசு கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்த புதிய வருமான வரிச் சட்ட மசோதா 2025-ஐ இன்று (ஆகஸ்ட் 8) திரும்பப் பெற்றதாக அறிவித்துள்ளது.

மத்திய பட்ஜெட் 2025–26, தனிநபர் வருமான வரி முறையில் சில பெரிய மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது. பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 1961ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வருமான வரிச் சட்டத்தை மாற்றி, புதிய மற்றும் எளிதான வருமான வரிச் சட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

இந்த மசோதா, பழைய சட்டத்தில் இருந்த பல்வேறு திருத்தங்கள் காரணமாக ஏற்பட்ட குழப்பங்களை நீக்கி, வரி செலுத்துவோருக்கும், வரி நிர்வாகத்திற்கும் எளிமையாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்த மசோதா ஆய்வுக்காகப் பாஜக எம்.பி. பைஜயந்த் பாண்டா தலைமையிலான தேர்வுக் குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தக் குழு பல்வேறு பரிந்துரைகளை அளித்து, ஜூலை 21 அன்று அதன் விரிவான அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தது.

புதிய வருமான வரிச் சட்டத்தின் முக்கிய அம்சங்கள் மற்றும் தேர்வுக் குழுவின் பரிந்துரைகள்:

புதிய வருமான வரி மசோதா, நடுத்தர வர்க்கத்தினருக்கு பெரும் நிவாரணம் அளிப்பதாக இருந்தது. குறிப்பாக, புதிய வரிவிதிப்பு முறையில், ஆண்டுக்கு ₹12 லட்சம்வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு வருமான வரி இல்லையென அறிவிக்கப்பட்டது. மேலும், சம்பளம் பெறும் வரி செலுத்துவோருக்கு ₹75,000 நிலையான கழிவு (standard deduction) வழங்கப்பட்டதால், கிட்டத்தட்ட ₹12.75 லட்சம்வரை வருமானம் வரி விலக்கு பெற்றது.

தேர்வுக் குழுவின் அறிக்கையில், புதிய மசோதாவின் சில விதிகள்குறித்து கவலைகள் எழுப்பப்பட்டன. இதில், குறிப்பாகத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் சிறு நிறுவனங்கள் தொடர்பான சில விதிகளில் திருத்தங்கள் தேவையெனப் பரிந்துரைக்கப்பட்டது. இந்தப் பரிந்துரைகளின் அடிப்படையில், ஆகஸ்ட் 8, 2025 அன்று, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த மசோதாவை மக்களவையிலிருந்து திரும்பப் பெற்றார். விரைவில், திருத்தப்பட்ட புதிய வருமான வரி மசோதா தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

புதிய சட்ட மசோதாவில், பழைய மசோதாவை விட அதிகமான எளிமை மற்றும் வெளிப்படைத்தன்மை வழங்கும் வகையிலும், சிறு, நடுத்தர வணிக உரிமையாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் புரிந்துகொள்ள வசதியாகவும் மாற்றங்கள் செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள நிலையில், அனைத்து புதிய பரிந்துரைகள் மற்றும் திருத்தங்கள் உட்படுத்தப்பட்டு நாடாளுமன்றத்தில் புதிய வருமானவரிச் சட்டம் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இந்த நகர்வு, வரிச் சட்டங்களை இன்னும் தெளிவுபடுத்தி, வரி செலுத்துவோரின் நலன்களைப் பாதுகாக்கும் நோக்கத்தில் எடுக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.


Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Swiggy

When Hunger Calls, Swiggy Delivers!