மாதவிடாய் சுகாதாரத்திற்கு விழிப்புணர்வுப் பாடல் – பேட்மேன் அருணாச்சலம், கவிஞர் பா. விஜய் இணைந்து புதிய முயற்சி!
பெண்கள் சமத்துவ நாளில் அறிவிப்பு! தாரா கிரியேஷன்ஸ் சுதிர் தயாரிப்பு! பாடல் பல மொழிகளில் வெளியாகிறது!
பெண்களின் மாதவிடாய் சுகாதாரத்தில் புரட்சியை ஏற்படுத்திய 'பத்மஸ்ரீ' அருணாச்சலம் முருகானந்தம், தற்போது கவிஞர் பா. விஜய் மற்றும் தாரா கிரியேஷன்ஸ் சுதிர் ஆகியோருடன் இணைந்து மாதவிடாய் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வுப் பாடல் ஒன்றை உருவாக்குகிறார். இந்தப் பாடல் மூலம் மூடநம்பிக்கைகளைத் தகர்த்து, முழுமையான மாதவிடாய் சுகாதாரத்தைப் பேணுவது குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த இலக்கு நிர்ணயித்துள்ளார்.
கொரோனாவுக்குப் பின் மீண்டும் முழுமூச்சுடன்
பெண்கள் சமத்துவ நாளான இன்று (ஆகஸ்ட் 26) இந்த புதிய முன்னெடுப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதுகுறித்து பேசிய அருணாச்சலம் முருகானந்தம், "மாதவிடாய் சுகாதாரம் குறித்த எங்களது விழிப்புணர்வு முயற்சிகள் பெரும் நேர்மறை விளைவுகளை ஏற்படுத்தி வந்த நிலையில், கொரோனா பெருந்தொற்று ஒரு தொய்வை ஏற்படுத்தியது. இப்போது மீண்டும் முழுமூச்சுடன் இந்த முயற்சியில் இறங்கியுள்ளோம்.
அதன் ஒரு பகுதியாக, விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்தப் பாடலை உருவாக்குகிறோம்" என்றார்.
உலகம் முழுவதும் வெளியீடு
துபாயைச் சேர்ந்த இந்திய தொழிலதிபர் தாரா கிரியேஷன்ஸ் சுதிர் இந்தப் பாடலைத் தயாரிக்கிறார். "இந்தப் படைப்பை உலகம் முழுவதும் உள்ள அனைத்துப் பெண்களுக்கும் நாங்கள் அர்ப்பணிக்கிறோம்" என்று அவர் தெரிவித்தார்.
இந்தப் பாடலுக்கான தமிழ் வரிகளை கவிஞர் பா. விஜய் எழுதுகிறார். உலகம் முழுவதும் உள்ள பல்வேறு மொழிகளிலும் இந்தப் பாடல் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
in
தமிழகம்