அன்புமணி தலைமையில் பாமக பொதுக்குழு கூட்டம்: சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி!
பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெறும் பொதுக்குழுக் கூட்டத்திற்குத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, திட்டமிட்டபடி ஆகஸ்ட் 9, 2025 அன்று மாமல்லபுரத்தில் பாமக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவிருக்கிறது.
பாமகவில் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே அதிகாரப் போட்டி அதிகரிப்பதாகக் கூறப்படும் நிலையில், ராமதாஸ் தனது மகனுக்கு எதிராகப் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். பாட்டாளி மக்கள் கட்சியைப் பிரிக்க அன்புமணி சதி செய்வதாகவும், தனது அதிகாரத்தைப் பறிக்க முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இதையடுத்து, ஆகஸ்ட் 9 அன்று அன்புமணி தலைமையில் நடைபெறவிருந்த பொதுக்குழுக் கூட்டத்திற்குத் தடை விதிக்கக் கோரி ராமதாஸ் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார்.
நீதிமன்ற விசாரணையின்போது, உடல்நலக் குறைபாடு காரணமாக ராமதாஸ் காணொலி வாயிலாக ஆஜரானார். அதேசமயம், அன்புமணி ராமதாஸ் நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜரானார். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, ராமதாஸின் மனுவைத் தள்ளுபடி செய்து, அன்புமணி தலைமையில் பொதுக்குழுக் கூட்டத்தை நடத்த அனுமதி வழங்கினார்.
நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புகுறித்து, அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில், "மாமல்லபுரத்தில் நாளைக் காலை 11 மணிக்கு நடைபெறவிருக்கும் பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கைச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. திட்டமிட்டபடி பாமக பொதுக்குழுவை நடத்திக் கொள்ளலாம் என்று தீர்ப்பளித்திருக்கிறது. இது நீதிக்கும் அறத்திற்கும் கிடைத்த வெற்றி" என்று பதிவிட்டுள்ளார்.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்தக் கூட்டம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சிப் பணிகள்குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.