திருப்பூர் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் படுகொலை: முதல்வர் ஸ்டாலின் ₹1 கோடி நிதியுதவி அறிவிப்பு!
மாநிலத்தையே உலுக்கிய ஒரு கொடூரச் சம்பவத்தில், திருப்பூரில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல், அடிதடியைத் தடுக்க முயற்சித்தபோது, ஆவேசமடைந்த ஒரு நபரால் அரிவாளால் ஓட ஓட வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கொடுரமான சம்பவத்தைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்த முதல்வர் ஸ்டாலின், உயிரிழந்த சண்முகவேலின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கி "உடனடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
குடிமங்கலம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சண்முகவேல் (57) மற்றும் ஆயுதப்படை காவலர் அழகுராஜா ஆகியோர் நேற்று (05.08.2025) இரவு 11.00 மணியளவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, 100 என்ற எண்ணுக்கு வந்த அழைப்பில், அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டத்தில் தந்தை மூர்த்தி மற்றும் மகன் தங்கபாண்டியன் இடையே அடிதடி நடப்பதாகத் தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சண்முகவேல், மகன் தங்கபாண்டியன் தந்தையை அரிவாளால் வெட்ட முயன்றதைக் கண்டு, அதைத் தடுக்க முயன்றார். அப்போது வெறித்தனமாக ஆத்திரமடைந்த தங்கபாண்டியன், காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேலை அரிவாளால் துரத்திச் சென்று வெட்டியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தடுக்க வந்த காவலர் அழகுராஜாவுக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
இந்தத் துயரகரமான செய்தியைக் கேட்ட முதல்வர் ஸ்டாலின், சண்முகவேல் அவர்களின் உயிரிழப்பு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து கைதுசெய்ய காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளேன். அவரது குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்" என அறிவித்தார்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக 5 தனிப்படை அமைத்து, தலைமறைவான 3 குற்றவாளிகளைப் போலீசார் தேடி வருகின்றனர். காவல் துறை அதிகாரி ஒருவர் பணிப் பாதுகாப்பின்றி கொலை செய்யப்பட்டிருப்பது, மாநிலம் முழுவதும் "பகீர்" என்ற அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.