தேனாம்பேட்டை நட்சத்திர ஹோட்டலில் தீ விபத்து: நள்ளிரவில் அலறி அடித்து ஓடிய பயணிகள்!
தேனாம்பேட்டையில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியான ஹயாத் ஹோட்டலில், நள்ளிரவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து, அங்கிருந்த பயணிகள் மற்றும் முக்கியப் போட்டிகளில் பங்கேற்க வந்த வீரர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மின் கசிவு காரணமாக ஏற்பட்ட இந்த விபத்தால், இன்று நடைபெறவிருந்த அனைத்துப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
நேற்று நள்ளிரவு, ஹயாத் ஹோட்டலின் 9-வது தளத்தில் உள்ள பான்ட்ரி ஸ்டோரேஜ் பகுதியில் மின் கசிவு காரணமாகத் திடீரெனத் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவெனப் பரவியதால், ஹோட்டலில் தங்கி இருந்த நபர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேனாம்பேட்டை தீயணைப்புத்துறையினர், சுமார் ஒரு மணி நேரம் போராடித் தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீ அணைக்கப்பட்ட பின்னரும், ஹோட்டல் முழுவதும் கரும்புகை சூழ்ந்ததால், அங்குத் தங்கி இருந்த பெரும்பான்மையான பயணிகள் மற்றும் வீரர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு, அதே பகுதியில் உள்ள மற்றொரு நட்சத்திர விடுதிக்கு மாற்றப்பட்டனர்.
இந்தத் தீ விபத்து காரணமாக, இன்று நடைபெற இருந்த அனைத்துப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டு, நாளைக்கு மாற்றப்பட்டுள்ளன. மேலும், ஆகஸ்ட் 11-ஆம் தேதி ஓய்வு நாளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அன்றைய தினமும் போட்டிகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம்குறித்து தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.