டெல்லி காவல்துறை அதிரடி: காங்கிரஸ் எம்பி சுதாவிடம் செயின் பறித்த குற்றவாளி கைது!
டெல்லியில் நடைபயிற்சி மேற்கொண்ட மயிலாடுதுறை எம்பி சுதாவிடம் மர்ம நபர் செயின் பறிப்பு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி குற்றவாளியைக் கைது செய்து, 4 சவரன் தங்கச் சங்கிலியை மீட்டுள்ளனர்.
தலைநகர் டெல்லியில், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுதாவிடம், மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் செயின் பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரே இது போன்ற துணிச்சலான குற்றச் செயலுக்கு ஆளாகியிருப்பது, டெல்லியின் பொதுப் பாதுகாப்பு குறித்த கேள்வியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம்குறித்து, பாதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுதா அளித்த புகாரின் பேரில், டெல்லி காவல்துறை உடனடியாக விசாரணை மேற்கொண்டது. அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், குற்றவாளியைக் கண்டறிந்து தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு, செயின் பறிப்பில் ஈடுபட்ட நபரை டெல்லி காவலர்கள் அதிரடியாகக் கைது செய்தனர். விசாரணையில், கைது செய்யப்பட்ட நபருக்கு ஏற்கெனவே பல்வேறு குற்றப் பின்னணிகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம், அரசியல் தலைவர்கள் மத்தியில் மட்டுமின்றி, பொதுமக்கள் மத்தியிலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தலைநகரில் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.