ரோபோ 'Xueba 01'க்கு முனைவர் பட்டம்: நாடகம், திரைப்படத் துறையில் புதிய புரட்சி!
"இந்த எந்திரன் என்பவன் படைப்பின் உச்சம்" என்ற தத்துவத்திற்குச் சான்றாக, சீனாவில் உள்ள ஷாங்காய் பல்கலைக்கழகம் ஒன்று, மனித வடிவிலான ரோபோ ஒன்றுக்கு நாடகம் மற்றும் திரைப்படப் பிரிவில் முனைவர் பட்டம் (Ph.D.) பெற முதல்முறையாக அனுமதி வழங்கி, உலகையே திகைக்க வைத்துள்ளது. செயற்கை நுண்ணறிவின் (Artificial Intelligence) வளர்ச்சியில் இது ஒரு 'புதிய அத்தியாயம்' என வல்லுநர்கள் சிலாகிக்கின்றனர்.
'Xueba 01' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ, இனி மற்ற மாணவர்களைப் போலவே வகுப்பறைகளில் கல்வி கற்க உள்ளது. இந்த ரோபோவின் மிகப்பெரிய சிறப்பு என்னவென்றால், இது மனிதர்களுடன் இயல்பாக உரையாடும் திறன் கொண்டதுதான். நாடகம் மற்றும் திரைப்படம் போன்ற மனித உணர்வுகள், படைப்பாற்றல் நிறைந்த ஒரு துறையில் ஒரு ரோபோ படிப்பது, கல்வி மற்றும் தொழில்நுட்ப உலகில் புதிய விவாதங்களைத் தொடங்கி வைத்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு என்பது பெரும்பாலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளுக்கு மட்டுமே உரியது என்ற எண்ணம் நிலவி வந்த நிலையில், 'Xueba 01' மூலம் கலை மற்றும் படைப்பாற்றல் துறையிலும் ரோபோக்களால் சாதிக்க முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோ, மனிதர்களுடன் இணைந்து கற்றல், கருத்துப் பரிமாற்றம், படைப்புகளை உருவாக்குதல் எனப் பலவற்றிலும் ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மனிதர்களால் மட்டுமே சாத்தியம் எனக் கருதப்பட்ட முனைவர் பட்டம், தற்போது ஒரு ரோபோவால் கற்கப்படுவது, எதிர்காலத்தில் கல்வி நிறுவனங்களின் அமைப்பு எப்படி இருக்கும் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இது, மனிதன் மற்றும் எந்திரனின் கூட்டுச் செயல்பாட்டிற்கு ஒரு பெரும் அச்சாரமாக அமையும் எனத் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆர்வத்துடன் கணித்துள்ளனர்.