கணவர் உடலை மீட்டு கொடுங்கள்: பெரம்பலூரில் அமைச்சர் காலில் 'கண்ணீருடன்' விழுந்த பெண்!
சென்னைக்கு புதிய பேருந்து சேவைகளைத் தொடங்கி வைப்பதற்காகப் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திற்கு வருகை தந்த தமிழகப் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் அவர்கள், அங்கிருந்து கிளம்பும்போது அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்தது. தனது கணவரின் உடலை மீட்டுத் தரக் கோரி, ஒரு பெண்ணும் அவரது மகளும் அமைச்சரின் காலில் கண்ணீருடன் விழுந்ததால், அங்குப் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நிகழ்ச்சி முடிந்து அமைச்சர் வெளியேறும்போது, பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகாவிற்கு உட்பட்ட வடக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த காவேரி என்ற பெண், அவரது 19 வயது மகள் ஆனந்தி ஆகிய இரு பெண்களும் அமைச்சரின் காலில் விழுந்து கதறி அழுதனர். இந்த 'நெகிழ்ச்சியான' சம்பவம், உடனிருந்த அனைவரையும் "உறைந்து" போகச் செய்தது.
காவேரி அளித்த மனுவில், எனது கணவர் ரமேஷ், குடும்பக் கடன் சுமையால் மலேசியாவில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் உதவி சமையலராக 2 ஆண்டுகளுக்கு முன்பு பணிக்குச் சென்றார். அவருக்கு நேற்று (ஆகஸ்ட் 2) மதியம் உடல்நலக்குறைவால் ஏற்பட்டதால் அவர் இறந்துவிட்டார் என்ற துயரச் செய்தி எங்களுக்கு வந்தது. ஆனால், அவரது உடலை இந்தியாவிற்கு அனுப்ப வேண்டுமென்றால், ரூ.5 லட்சம் பணம் தர வேண்டும்" என்று பகீர் தகவலைத் தெரிவித்தார்.
நாங்கள் மிகவும் ஏழைகள், எங்களிடம் பணமில்லை. எனது கணவர் ரமேஷின் உடலை மீட்டு தாருங்கள், என்று அமைச்சர் சிவசங்கரின் காலில் விழுந்து கண்ணீருடன் காவேரி முறையிட்டார். அவரது கண்ணீரில் பதைபதைத்துப் போன அமைச்சர், உடனடியாக மனுவைப் பெற்றுக்கொண்டு, அழ வேண்டாம் என்று ஆறுதல் கூறி, தற்காலிக வருவாய் கோட்டாட்சியர் பொறுப்பிலிருக்கும் சக்திவேலை அழைத்து, மனுவைக் கொடுத்து, "உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கறாராக உத்தரவிட்டார்.
கடன் சுமையால் வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்றவரின் உடலை இந்தியா அனுப்ப பணம் கேட்டதால், அமைச்சர் சிவசங்கரின் காலில் விழுந்து அழுத ரமேஷின் மனைவி காவேரி மற்றும் அவரது மகள் ஆனந்தியால், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் "அனைத்து நிகழ்வுகளும்" ஸ்தம்பித்து, ஒருவித "பரபரப்பான" சூழல் உருவானது.