4 ஐபிஎஸ் அதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!
பிரமோத் குமார் ஊர்க்காவல் படை இயக்குநராகவும், வருண் குமார் சிபிசிஐடி டிஐஜியாகவும் மாற்றம்!
சென்னை: தமிழகம் முழுவதும் நிர்வாகப் பணிகளை மேம்படுத்தும் வகையில், நான்கு மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கான அறிவிப்பை உள்துறைச் செயலாளர் பிறப்பித்தார்.
இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகளின் விவரங்கள்:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோகக் கழகத்தின் லஞ்ச ஒழிப்புப் பிரிவு டிஜிபியாக இருந்த பிரமோத் குமார், தற்போது காவல்துறை குடிமைப் பாதுகாப்பு பிரிவு இயக்குநரும் ஊர்க்காவல் படை கமாண்டன்டாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
மாநில குற்ற ஆவணக் காப்பகத்தின் ஏடிஜிபியாக இருந்த ஆயுஷ் மணி திவாரி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோகக் கழகத்தின் லஞ்ச ஒழிப்புப் பிரிவு ஏடிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.
ஊர்க்காவல் படையின் ஐஜியாக இருந்த ஜெயஸ்ரீ, மாநில குற்ற ஆவணக் காப்பகத்தின் ஐஜியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி சரக காவல்துறை டிஐஜியாக இருந்த வருண் குமார், சிபிசிஐடி பிரிவின் டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த இடமாற்றங்கள், நிர்வாகத்தின் செயல்பாடுகளைத் துரிதப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.