ரெப்போ விகிதத்தில் மாற்றம் இல்லை.. வீடு, வாகனக் கடனுக்கு வட்டி குறையுமா? - RBI அறிவிப்பால் மக்கள் ஏமாற்றம்!
வீடு, வாகனம் போன்ற கடன்களை மாதத் தவணையில் (EMI) செலுத்தி வரும் கோடிக்கணக்கான மக்களுக்கு "பெரும் அதிர்ச்சியை" அளிக்கும் விதமாக, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தனது ரெப்போ விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யாமல், அதனை 5.5% ஆகவே தொடர முடிவெடுத்துள்ளது. இன்று நிறைவடைந்த நாணயக் கொள்கைக் குழு (MPC) கூட்டத்திற்குப் பின்னர், ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இந்த முடிவை அறிவித்தார்.
நடப்பாண்டில் ஏற்கெனவே ரெப்போ விகிதத்தில் ஒரு சதவீதம் குறைப்பு செய்யப்பட்டிருந்தாலும், அதன் பலனை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு முழுமையாகக் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. இந்த நிலையில், ரெப்போ விகிதம் குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தவர்களுக்கு, இந்த அறிவிப்பு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, வங்கிகள் விரைவில் கடன் வட்டிகளைக் குறைக்க வாய்ப்பில்லை என்பதால், மக்களின் மாதத் தவணையில் இப்போதைக்கு எந்த மாற்றமும் இருக்காது என்பது உறுதியாகி உள்ளது.
இந்தியாவின் உள்நாட்டுப் பொருளாதாரம் மற்றும் பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டிருந்தாலும், சர்வதேச அளவில் நடந்து வரும் சில அரசியல் மாற்றங்களும் இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக, இந்தியப் பொருட்களுக்கு 25% வரி விதிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில், வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் ரூபாய் மதிப்புகுறித்த கடும் நெருக்கடியில் ரிசர்வ் வங்கி இந்த முடிவை எடுத்துள்ளது. வரும் காலங்களில் ரெப்போ விகிதம் குறைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பில், மக்கள் நிம்மதிப் பெருமூச்சுவிட்டு காத்திருக்கின்றனர்.