அதிரடி திருப்பம்: திருமலா பால் மேலாளர் மர்ம மரணம் – தற்கொலைக் கடிதத்தில் ‘நிறுவன அதிகாரிகள்’ மீது பகீர் குற்றச்சாட்டு!
சென்னை பரபரப்பு! ரூ. 40 கோடி மோசடிப் புகாரில் சிக்கியவர் விபரீத முடிவு – காவல்துறைக்கு நெருக்கடி!
சென்னை: திருமலா பால் நிறுவனத்தின் கருவூல மேலாளராகப் பணியாற்றி வந்த நவீன் பொல்லினேனி (40), சென்னையில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தற்கொலை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தாலும், அவர் தனது தாய், சகோதரி மற்றும் சில சக ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சல் தற்கொலைக் கடிதத்தில், நிறுவனத்தின் சில அதிகாரிகளே தனது மன உளைச்சலுக்குக் காரணம் என்று நேரடியாகவே கைகாட்டியிருப்பது காவல்துறைக்கு பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது.
பின்னணி என்ன?
ஆந்திராவைச் சேர்ந்த நவீன், திருமலா பால் நிறுவனத்தில் ரூ. 40 கோடி அளவுக்கு நிதியை மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானார். இதில் ரூ. 5 கோடி அளவுக்கு பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், நிறுவனத்தின் சட்ட மேலாளர் மூலம் மத்திய குற்றப்பிரிவில் (CCB) புகார் அளிக்கப்பட்டதாகவும், பின் இந்த விவகாரம் துணை ஆணையர் (கொளத்தூர்) அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
‘டர்ட்டி கேம்’ ஆடிய அதிகாரிகள்?
நவீன் தனது தற்கொலைக் கடிதத்தில், “நான் பணத்தைத் திருப்பிக் கொடுத்த பின்னரும், நிறுவன அதிகாரிகள் சிலர் என்னை மிரட்டினர். சிறையில் அடைப்போம் என அச்சுறுத்தி, சித்திரவதை செய்தனர். என் மரணம் உங்கள் சாம்ராஜ்ஜியத்தையே அசைத்துப் பார்க்கும்” என உருக்கமாகக் குறிப்பிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது, நிறுவனத்திற்கு உள்ளேயே நடந்த சில மறைமுக டீலிங்குகள் மற்றும் அழுத்தங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
காவல்துறைக்கு ‘செக்’!
இந்த விவகாரத்தில் காவல்துறையின் அணுகுமுறை குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன. நவீன் மீது அதிகாரப்பூர்வமாக எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்றும், விசாரணைக்கு அழைக்கப்படவில்லை என்றும் சென்னை காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. எனினும், ஒரு சில அரசியல் தலைவர்கள், காவல்துறை முறையான வழக்கு பதிவு செய்யாமல், இரகசிய விசாரணை நடத்தியதாகவும், இது போன்ற அழுத்தங்கள் மரணத்திற்கு வழிவகுத்திருக்கலாம் என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேல்மட்ட விசாரணைக்கு உத்தரவு!
இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்ததை அடுத்து, சென்னை காவல் ஆணையர், மேற்கு மண்டல இணை ஆணையருக்கு இந்த வழக்கை முழுமையாக விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளார். நவீனின் மரணம், வெறும் தற்கொலையா அல்லது அதற்குப் பின்னணியில் வேறு ஏதேனும் சதி உள்ளதா என்பது குறித்த புதிய கோணம் தற்போது விசாரணையில் அடிபட்டுள்ளது.
இந்த வழக்கு, பெருநிறுவனங்களில் நடக்கும் நிதி மோசடிகள் மற்றும் அதற்குப் பின்னால் உள்ள மிரட்டல் அரசியல் குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது.