மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசன் சஸ்பெண்ட்: உயரதிகாரிகள் மீது குற்றச்சாட்டு - பெரும் அதிர்ச்சி!
உயிருக்கு அச்சுறுத்தல், நேர்மைக்கு விலையா? தஞ்சை டிஐஜி பரிந்துரை- கோட்டை வட்டாரத்தில் அனல்!
மயிலாடுதுறை: தமிழகக் காவல் துறை வட்டாரத்தில் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பி சுந்தரேசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட விவகாரம். தஞ்சை மண்டல டிஐஜி-யின் அதிரடி பரிந்துரையை அடுத்து, உயரதிகாரிகள் மீது பகிரங்கமாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்த சுந்தரேசன், இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் பணிபுரிந்து வந்த டிஎஸ்பி சுந்தரேசன், கடந்த சில மாதங்களாகவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வந்தார். நேர்மையாகச் செயல்படுவதால், தனக்கு உயரதிகாரிகளால் டார்ச்சர் கொடுக்கப்படுவதாகவும், உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் அவர் பரபரப்பான பேட்டிகளை அளித்து வந்தார். குறிப்பாக, தனது அதிகாரபூர்வ வாகனம் பறிக்கப்பட்டு, பழுதடைந்த வாகனம் வழங்கப்பட்டதாகவும், ஒரு கட்டத்தில் தனக்கு வாகனம் எதுவும் வழங்கப்படாமல், நடந்தே பணிக்குச் செல்வதாகவும் கூறி, அவர் நடந்தே அலுவலகம் சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாகப் பரவி, பெருங்கலக்கத்தை ஏற்படுத்தியது.
சென்னை சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி மற்றும் உளவுத்துறை ஐஜி ஆகியோர் தனது வாகனத்தைப் பறித்து, மனரீதியாகத் துன்புறுத்துமாறு மயிலாடுதுறை எஸ்.பி. ஸ்டாலினை தூண்டுவதாகவும், காஞ்சிபுரம் கொலை வழக்கு ஒன்றின் விசாரணை அறிக்கையை மாற்றக் கோரி தன்னை நிர்ப்பந்தித்ததாகவும் சுந்தரேசன் பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். லஞ்சம் வாங்கியது நிரூபிக்கப்பட்டால் அலுவலக வாசலிலேயே தூக்கு மாட்டிக்கொள்ளத் தயார், என்றும் அவர் சவால் விடுத்திருந்தார். நேர்மையாக இருப்பதே குற்றமா? எனக் கேள்வி எழுப்பிய அவரது பேச்சுக்கள் காவல் துறை உயர் மட்டங்களில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தின.
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து மயிலாடுதுறை எஸ்.பி. ஸ்டாலின் மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், டிஐஜியின் அறிக்கை மற்றும் பரிந்துரையின் அடிப்படையில், டிஎஸ்பி சுந்தரேசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஒரு காவல் அதிகாரி, வெளிப்படையாக உயரதிகாரிகளைக் குற்றஞ்சாட்டிய நிலையில், அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது, காவல் துறையில் பெரும் விவாதத்தை எழுப்பியுள்ளது. இந்த நடவடிக்கையின் பின்னணியில் இருக்கும் உண்மையான காரணம் என்ன என்பது குறித்து அரசியல் வட்டாரங்கள் அனல் பறக்கும் விவாதத்தில் ஈடுபட்டுள்ளன.