ராணிப்பேட்டையை உலுக்கிய ஆசிரியர் போராட்டம்: 100 பேர் அதிரடி கைது!
பணத்தை சுருட்டிய அரசைக் கண்டித்து ரோட்டில் இறங்கிய ஆசிரியர்கள்! கோட்டையை நோக்கி அடுத்த களம் என எச்சரிக்கை!
ராணிப்பேட்டை: எங்கள் பணத்தை அரசு சுருட்டுகிறது! எனக் கொதித்தெழுந்த தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினர், நேற்று ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே அதிரடி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 150-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஆக்ரோஷமாகக் கண்டனக் கோஷங்களை எழுப்ப, போலீசார் பகீர் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.
10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே அனல் பறக்கும் விதமாக அரங்கேறியது. ஆசிரியர்கள் பேசுகையில், தமிழக அரசு, ஆசிரியர்களின் பணத்தை மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்காகப் பயன்படுத்தி வருகிறது. இந்த மோசமான போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம். எங்களைக் கேவலமாக நடத்துவதையும், பாதாளத்தில் தள்ளும் போக்கையும் தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என கறாராக எச்சரித்தனர்.
மேலும், தங்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றத் தவறினால், அடுத்தகட்டமாகச் சென்னைக் கோட்டையை நோக்கி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் தீர்க்கமாக அறிவித்தனர்.
அரசாணை எண் 243-ஐ ரத்து செய்ய வேண்டும், உயர்கல்வி ஊக்க ஊதிய உயர்வை வழங்கிட வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், பகுதிநேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்கள், விரைந்து வந்த காவல்துறையினரால் கண்ணிமைக்கும் நேரத்தில் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார்