தமிழகத்தில் இன்று TNPSC குரூப்-4 தேர்வு.. 3935 பணியிடங்களுக்கு போட்டியிடும் 13.89 லட்சம் தேர்வர்கள்!
தமிழ்நாடு முழுவதும் இன்று TNPSC குரூப்-4 தேர்வு 4,922 மையங்களில் 13.89 லட்சம் பேர் தேர்வெழுதுகின்றனர். இந்தத் தேர்வின் மூலம் மொத்தம் 3935 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 3,935 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ( TNPSC ) தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்கிறது. அதற்கான குரூப் 4 போட்டித்தேர்வு இன்று நடைபெறுகிறது.
இந்த தேர்வின் மூலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காப்பாளர், வனக்காவலர் போன்ற 3,935 பணிகளுக்கு தேர்வு நடைபெறவுள்ளது. இதற்கான ஹால்டிக்கெட் சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில், இன்று தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்த தேர்வை ஆண்கள் 5 லட்சத்து 26 ஆயிரத்து 553 பேரும், பெண்கள் 8 லட்சத்து 63 ஆயிரத்து 68 பேரும், மாற்றுப் பாலினத்தவர் 117 பேர் என மொத்தம் 13 லட்சத்து 89 ஆயிரத்து 738 பேர் எழுதுகின்றனர். இதற்காக தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களில் 4,922 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 94,848 பேர் எழுதுகிறார்கள். மேலும் தேர்வுப் பணியில் 4,500 கண்காணிப்பாளர்கள் ஈடுபட உள்ளனர்.
இந்த தேர்வு இன்று காலை 9.30 மணி தொடங்கி பிற்பகல் 12.30 மணி வரை நடைபெற உள்ளது. மேலும் தேர்வு எழுதுவோர் தேர்வாணைய இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட ஹால் டிக்கெட்டை கட்டாயம் கொண்டு வர வேண்டும். தேர்வர்கள் தங்களது ஆதார் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலை கொண்டு வர வேண்டும்.
தேர்வு மையத்தின் அனைத்து நுழைவாயில்களும் தேர்வு தொடங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னதாக மூடப்படும். அதன் பின்னர் வரும் யாரும் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என டிஎன்பிஎஸ்சி உத்தரவிட்டுள்ளது.