Crime : வீடு புகுந்து மூதாட்டியின் கழுத்தை அறுத்து நகை பறித்த இளம்பெண்.!

சேலம்:

சேலம் தாதகாப்பட்டி உழவர் சந்தை அருகில் சவுந்தர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மெகருன்னிஷா (வயது 80). இவர் தனது மகள் கவுசல் ஜான் (52) மற்றும் குடும்பத்தினருடன் அங்குள்ள மேல்மாடி வீட்டில் வாடகைக்கு வசித்து வருகிறார். கவுசல் ஜான், கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவருடைய கணவர் நசீர். மளிகை வியாபாரி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். நேற்று காலை கவுசல் ஜான், நசீர், பேரன்கள் அனைவரும் அவர்களது வேலை தொடர்பாக வெளியே சென்று விட்டனர். மெகருன்னிஷா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். நேற்று காலை சுமார் 11. 30 மணி அளவில் பர்தா அணிந்து வந்த இளம்பெண் ஒருவர், மூதாட்டி மெகருன்னிஷாவிடம் குடிக்க தண்ணீர் கேட்டதாக தெரிகிறது. அவர், தண்ணீர் எடுத்து வர வீட்டுக்குள் சென்றார். அவரை பின்தொடர்ந்து அந்த பெண்ணும் சென்றுள்ளார்.

வீட்டுக்குள் சென்றவுடன், மூதாட்டியிடம், நீங்கள் அணிந்துள்ள தோடு, மாட்டல், கம்மல் உள்ளிட்டவற்றை கழற்றி தருமாறு அந்த பெண் கேட்டுள்ளார். அவர், மறுக்கவே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மூதாட்டி சத்தம் போட்டு அலற தொடங்கினார். இதில் ஆத்திரமடைந்த அந்த பெண், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மெகருன்னிஷாவின் கழுத்தை அறுத்துள்ளார். வலியால் அலறி துடித்த மூதாட்டி மெகருன்னிஷா ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர்.

இதைக் கண்டு அந்த பெண் அங்கிருந்து நைசாக தப்பிக்க முயன்றார். அவரை அக்கம்பக்கத்தினர் சுற்றி வளைத்து பிடித்து சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அன்னதானப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் மூதாட்டி மெகருன்னிஷாவை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்தனர்.

அந்த பெண்ணை போலீசாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர். இதையடுத்து அந்த பெண்ணை அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். இதில், அவர் சேலம் லைன்மேடு, தர்மலிங்கம் தெரு பகுதியைச் சேர்ந்த சான்மா (30) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 1¼ பவுன் தோடு, மாட்டல் உள்ளிட்டவை மீட்கப்பட்டது. அந்த பெண் வேறு இடங்களில் ஏதும் கைவரிசை காட்டி உள்ளாரா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. பட்டப்பகலில் வீடு புகுந்து மூதாட்டியின் கழுத்தை அறுத்து நகை பறிப்பில் ஈடுபட்ட இளம்பெண்ணால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk