ராஜ கோபுரத்தில் ரஜினி, கமல், நயன்தாரா சிலைகளா? - "இது மலேசியன் ஸ்டைல்"

சென்னை: 

தமிழ் சினிமா ரசிகர்களை பொறுத்தவரை தங்களுக்கு ஒரு நடிகரையோ நடிகையையோ பிடித்துவிட்டால் அவர்களை தலைக்கு மேல் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். தங்களுக்கு பிடித்த நடிகர்களின் திரைப்படங்கள் ரிலீசாகும் நேரத்தில் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்துவது, பிடித்த நடிகர்களுக்கு உடல்நலம் சரியில்லாத நேரத்தில் அவர்களுக்காக வேண்டிக் கொண்டு கோயில்களில் நேர்த்திக்கடன் செலுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள்.

சமீப காலங்களில் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நடிகர், நடிகைகளை கடவுளுக்கு இணையாக பாவிக்கின்றனர். அதில் ஒருபடி மேலே சென்று தனக்கு பிடித்த நடிகர், நடிகைகளுக்கு கோயில் கட்டியும் தங்களது அன்பை வெளிப்படுத்துகிறார்கள். இது இப்போது ஒரு வாடிக்கையாகிவிட்டது. ரசிகர்கள் குஷ்பூ, நயன்தாரா, சமந்தா, நிதி அகர்வால் என தங்களுக்கு பிடித்த நடிகைகளுக்கு கோயில் கட்டி வழிபடுகின்றனர். ஆனால் இது எல்லாவற்றிற்கும் மேலாக மலேசியாவில் நடந்துள்ள ஆச்சரியத்தை கேட்டால் வியந்து போவீர்கள்.

மலேசியா கோலாலம்பூர் மாகாணத்தில் கங்கை வே ஸ்ரீ சக்தி ஈஸ்வரி ஆலயம் ஒன்று உள்ளது.‌ பழமை வாய்ந்த அந்த கோயிலில் சமீபத்தில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்நிலையில் அந்த கோயிலின் ராஜ கோபுரத்தில் இருக்கும் சிலைகள் தான்‌ தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளன. ஏனென்றால் அந்த சிலைகளை பார்க்கும் போது நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், நயன்தாரா சாயலில் உள்ளன.

இந்த செய்தி உடனடியாக சமூக வலைத்தளங்களில் பரவியது. இதனால் சலசலப்பு ஏற்பட்டது. ஒரு கோயிலில் தெய்வங்களுக்கு இணையாக அருகே எப்படி நடிகர்களின் உருவங்களை சிலையாக செதுக்கலாம் என்று சமூக வலைத்தளங்களில் கேள்வி கேட்கத் தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் குற்றஞ்சாட்டுக்கு ஆலயத் தலைவர் செல்வம் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, 15 ஆண்டுகளாக இந்த சிலைகள் இங்குதான் உள்ளன. தற்போது திடீரென நடிகர்களின் சாயலில் அது இருப்பதாக கூறுவது தவறானது என்றார்.

மேலும் இதுகுறித்து மலேசியா இந்து சங்கத்தின் தற்போதைய தலைவர் தங்க கணேசனிடம் விளக்கம் தெரிவித்து விட்டதாக கூறினார். தற்போது தான் கும்பாபிஷேகம் நிறைவடைந்துள்ளதால் உடனடியாக சிலைகளை அகற்ற முடியாது என்றும், ஒரு சில மாதங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Previous Post Next Post

Post Ads 1

 

Post Ads 2

 
 

Swiggy

When Hunger Calls, Swiggy Delivers!