சேலம்:
தாரமங்கலம் அருகே உள்ள பவளத்தானூர் ஓங்காளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி ஆண்டு தோறும் எருதாட்டம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா காலகட்டத்தில் எருதாட்டம் தடைபட்டது.
இந்த ஆண்டு திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக எருதாட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலை முதல் பெண்கள் ஏராளமானோர் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர். தொடர்ந்து கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன. மாலை 3 மணி யளவில் எருதாட்டம் தொடங்கியது.
சுற்றுவட்டார பகுதி களில் இருந்து 30-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. வாலிபர்கள் காளைகளின் கழுத்தில் கயிறு கட்டி கோவிலை சுற்றி வந்து பொம்மைகள் காட்டி விளையாடினர். சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு, எருதாட்டத்தை கண்டு ரசித்தனர். இதையொட்டி தாரமங்கலம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.