3,436 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து - கலெக்டர் தகவல்..!

சேலம்:

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது: –

பொதுமக்களிடையே சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை தவிர்க்கும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சாலை விபத்துகளே இல்லாத மாவட்டமாக சேலம் மாவட்டத்தை உருவாக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வாகன ஓட்டிகள் தலைக்கவசம் மற்றும் சீட்பெல்ட் அணிவது, வாகனம் ஓட்டும் போது கைப்பேசி பயன்படுத்தாமல் இருப்பது, குடிபோதையில் வாகனம் ஓட்டக்கூடாது போன்ற சாலை பாதுகாப்பு விதிகளை பின்பற்றவேண்டும்.

இதை வலியுறுத்தி சாலைகளின் முக்கிய இடங்களில் விளம்பர பதாகைகள் மற்றும் ஒலிப்பெருக்கிகள் மூலம் வாகன ஓட்டிகள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் சாலை விதிகளை முறையாக பின்பற்றாமல் வாகனம் ஓட்டிய 3, 436 பேரின் வாகன ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்த 6 மாதங்களில் மாநகர பகுதிகளில் 54 சதவீதமும், ஊரக பகுதிகளில் 46 சதவீதமும் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக சாலை சந்திப்புகள், வளைவுகள், குறுகிய சாலைகள், போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் அதிக வேகமாக செல்வதால் விபத்துகள் ஏற்படுகின்றன. சாலைகளில் எதிர்திசையில் வாகனங்கள் ஓட்டுவதாலும், உரிய சைகை இல்லாமல் வலது, இடது திசையில் திடீரென வாகனங்களை திருப்புவதாலும், வாகனங்களை எந்த சைகையும் இல்லாமல் சாலையோரங்களில் நிறுத்துவதாலும் விபத்துகள் ஏற்படுகின்றன. சாலை பாதுகாப்பு குறித்து தொடர் நடவடிக்கைகளை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம்
சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம்

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார், உதவி கலெக்டர் (பயிற்சி) சங்கீத் பல்வந்த் வாகி, மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, போலீஸ் துணை கமிஷனர்கள் மாடசாமி, லாவண்யா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெகநாதன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post

Post Ads 1

 

Post Ads 2

 
 

Swiggy

When Hunger Calls, Swiggy Delivers!