வேலூர்:
காதலியை கல்லூரி மாணவர் கத்தியால் குத்தியிருக்கிறார். உயிருக்கு போராடிய நிலையில் இளம்பெண் மருத்துவமனையில் சிகிச்சை… போலீசில் கொடுத்த வாக்குமூலம்.
வேலூர் மாவட்டம் குப்பாத்தா மோட்டூர் பகுதியைச் சேர்ந்த சத்தீஷ்குமார். 20 வயதான இவர் வேலூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் ஆர்த்தோ டெக்னீசியன் 4-ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும், ராணிப்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் மெடிக்கல் ரெக்காட்ஸ் படித்து வந்த 18 வயது இளம்பெண்ணுக்கும் நட்பு உண்டானது. ஆரம்பத்தில் நண்பர்களாக பழகியவர்கள் ஒருவரை ஒருவர் காதலிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். 3 வருடங்கள் கடந்து விட, காதலியை திருமணம் செய்து கொள்ளும் ஆசையில் சத்தீஷ்குமார் பெண் கேட்டு சென்றதாகக் கூறப்படுகிறது.
ஆனால் அதில் ஏதோ சில மன கசப்புகள் உண்டாகியிருக்கிறது. இந்நிலையில் இன்று காலை இருவரும் கல்லூரி செல்ல திருவலம் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளனர். அப்போது அருகில் இருந்த பிள்ளையார் கோயில் எதிரில் நின்று பேசிக்கொண்டிருக்கும் போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சத்தீஷ்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் இளம்பெண்ணின் கழுத்தில் குத்தியிருக்கிறார்.
இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த அந்த பெண் ரத்த வெள்ளத்தில் மிதந்துள்ளார். பின்னர், அவரை மீட்ட பொது மக்கள் 108 ஆம்புலென்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வேலூரில் உள்ள சிஎம்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவல் அறிந்து விரைந்து வந்த திருவலம் காவல் துறையினர் கல்லூரி மாணவன் சத்தீஷ்குமாரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த இருவருக்கும் ஏற்கனவே ரகசிய திருமணம் ஆகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
– Gowtham Natarajan