தஞ்சையில் காணாமல்போனது, லண்டனில் கண்டெடுப்பு..! "தமிழின் முதல் பைபிள்".!!

தஞ்சை சரஸ்வதி மகால் நூலக அருங்காட்சியகத்தில் இருந்து காணாமல் போன தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட முதல் பைபிள் லண்டனில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பார்த்தோலொமஸ் சீகன் பால்க் என்பவர் தென் இந்தியாவின் சிறந்த கிறிஸ்துவ மதபோதகர். 1682-ம் ஆண்டு ஜெர்மன் நாட்டிலுள்ள சாக்சானி என்ற நகரத்தில் பிறந்த இவர், பாலே பல்கலைகழகத்தில் படித்து லுாதரன் தேவாலயத்தில் மதபோதகராக பணியாற்றினார்.

டென்மார்க் நாட்டு மன்னரின் வேண்டுகோளை ஏற்று இவரும், கென்ரிக் என்பவரும், கடந்த 1706-ம் ஆண்டு தற்போதைய தரங்கம்பாடி டச்சு காலனி வசம் இருந்தபோது வருகை தந்தார். இங்கு அவரே ஒரு அச்சகத்தை நிறுவி அதில் தமிழ் மொழியில் இந்திய நாட்டு கலாச்சாரம் மற்றும் மதம் சம்மந்தமான படிப்புகளை வெளியிட்டார்.

இவர் பைபிளின் “புதிய அத்தியாயத்தை” தமிழில் 1715-ம் ஆண்டு மொழி பெயர்த்தார். 2 தேவாலயங்கள், ஒரு பிரார்த்தனை கூடத்தை கட்டிய இவர், 1719-ம் ஆண்டு உயிரிழந்தார். சீகன் பால்க்கால் மொழி பெயர்க்கப்பட்டு அச்சிடப்பட்ட பைபிள் (புதிய அத்தியாயம்) அப்போதைய தஞ்சாவூர் சரபோஜி மன்னருக்கு பரிசாக வழங்கப்பட்டது. அந்த புத்தகம் பிற்காலத்தில் தமிழக அரசாங்கத்தால் கைப்பற்றப்பட்டு தஞ்சை சரஸ்வதி மகால் நுாலக அருங்காட்சியகத்தில் பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.

விலை மதிப்பில்லாத இந்த பைபிளானது காணமல் போய்விட்டதாக கடந்த 10.10.2005-ம் ஆண்டு சரஸ்வதி மகால் அருங்காட்சியகத்தின் நிர்வாக அலுவலர் தஞ்சாவூர் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் கண்டுபிடிக்க இயலாத வழக்காக முடிக்கப்பட்டது. இந்த புராதானமான பைபிள் களவு போனது தொடர்பாக கடந்த 17.10.2017 அன்று வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

காணாமல் போன இந்த பைபிளைக் கண்டுபிடிக்க காவல்துறை கண்காணிப்பாளர்  ரவி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இத்தனிப்படையினர் அந்த அருங்காட்சியகத்தின் பார்வையாளர் பதிவேடுகளை பார்வையிட்ட போது சில வெளிநாட்டினர் கடந்த 07.10.2005 அன்று அருங்காட்சியகத்திற்கு வந்து சென்றது தெரிய வந்தது. ஒரு குழுவாக வந்த இவர்கள் மதபோதகர் சீகன் பால்க்கின் நுாற்றாண்டு நினைவு நிகழ்ச்சிகளுக்காக இங்கே வருகை தந்ததும், சீகன் பால்க் சம்மந்தப்பட்ட இடங்களைப் பார்வையிட்டதும் தெரியவந்தது.

மேலும் இத்தனிப்படையினர் பல்வேறு வெளிநாட்டு அருங்காட்சியகங்களின் வலைதளங்களை ஆராய்ச்சி செய்ததில், காணாமல் போன இந்த பைபிள் கிங்ஸ் கலெக்சன் என்ற லண்டனை சேர்ந்த ஒரு நிறுவனத்தின் வலைதளத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பைபிள் சரஸ்வதி மகால் நுாலக அருங்காட்சியகத்தில் இருந்து திருடப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை யுனேஸ்கோ ஒப்பந்தத்தின் மூலமாக திரும்ப கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் இது எவ்வாறு, யார் மூலம் அங்கு சென்றது என்பது குறித்தும் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

                                                                                                                             – Chithira Rekha 

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Travel with us!

News Editor's/Reporter's can join with our Desk Team. Publish your news now on 24×7. Reachout with your contact through editor@ipdtamil.com