கட்டுமானப் பொருட்கள் தட்டுப்பாடு - காரணம் இதுதான்.?

நெல்லை:

Nellai Construction material Shortage : நெல்லையில் கடந்த ஒரு மாத காலமாக கட்டுமான பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. சொல்லப்போனால் கிடைக்கவேயில்லை என்கிறார்கள். அதற்கெல்லாம் காரணம் என்ன தெரியுமா?

கட்டுமானத் துறை அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்து வரும் நிலையில் நெல்லையில் மட்டும் ஒரு மாத காலமாக தொழிலாளர்கள், கட்டிடப் பொறியாளர்கள் என பலரும் புலம்பி வருகின்றனர். எந்தக் கட்டுமானப் பொருட்களும் நெல்லைக்குள் வருவதில்லை என்பதால் இதுகுறித்து அகில இந்திய கட்டுனர் சங்க நெல்லை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து அச்சங்கத்தின் நெல்லை மாவட்டத் தலைவர் வெங்கடேசன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அவர் அளித்த பேட்டியில் இருந்து சில முக்கியமான பிரச்சனைகளும், குற்றச்சாட்டுகளும், கோரிக்கைகளும்!

வேளாண்மை துறைக்கு அடுத்தபடியாக கட்டுமான துறை  இரண்டாம் இடத்தில் உள்ளது. கடந்த நான்கு மாதங்களாக கட்டுமான பொருட்கள் அசாதாரண விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

கட்டுமான பணிக்கு தேவைப்படும் அனைத்து பொருட்களும் 30 சதவீதம் வரை விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. விலை உயர்வு தொடர்பாக அரசின் உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களை சந்தித்து முறையிட்ட பின்னர் அதனை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதற்கெல்லாம் காரணம், கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்னால் நடைபெற்ற நெல்லைக் குவாரி விபத்துதான். அதிக அளவில் நெல்லையில் கிடைத்துக் கொண்டிருந்த கட்டுமானப் பொருட்கள் இந்த விபத்துக்குப் பிறகு எந்தப் பொருளும் கிடைக்காத நிலை ஏற்பட்டு வருகிறது.

தற்போது நெல்லை மாவட்டத்திற்கு தேவையான கட்டுமான பொருட்களை வாங்குவதற்கு பக்கத்து மாவட்டத்தை நம்பி இருக்க வேண்டியிருக்கிறது. அடுத்த மாவட்டத்தை நம்பி பொருட்கள் வாங்க சென்றால் ஒவ்வொரு பொருட்களுக்கும் கெடுபுடி ஏற்படுகிறது. அதுமட்டுமல்லாமல் பக்கத்துக்கு மாவட்டங்களில் தரமான பொருட்கள்  கிடைக்கவில்லை. எனவே வெளிமாவட்டங்களுக்குச் சென்று இரண்டு மடங்கு விலைக்கு வாங்க வேண்டியிருக்கிறது.

இதன்காரணமாக, வீடு கட்டி முடித்து ஆனி மாதத்தில் புதுமனை புகுவிழா நடத்த இருந்தவர்கள் எதுவும் செய்ய முடியாத நிலையில் இருந்து வருகின்றனர். இந்தப் பிரச்சனை தொடர்பாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிட்ட நிலையில் ஒரு வாரங்களில் அனைத்தும் சரியாகிவிடும் என உறுதி அளித்தார். ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கட்டுமான பொருட்கள் கிடைக்காத நிலையில் புதிய கட்டிடங்கள் கட்டும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் கட்டுமான தொழிலாளர்கள், பொறியாளர்கள் எனப் பலர் வேலை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது உருவாகியுள்ள சிக்கலான சூழலை சரி செய்திட தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அகில இந்திய கட்டுனர் சங்க நெல்லை மாவட்ட நிர்வாகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

                                                                                                                        – நவீன் டேரியஸ் 

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Travel with us!

News Editor's/Reporter's can join with our Desk Team. Publish your news now on 24×7. Reachout with your contact through editor@ipdtamil.com