நள்ளிரவில் லிப்ட் கேட்ட பெண்..! அடுத்தடுத்த ட்விஸ்ட்.!! கும்பல் செய்த அட்டூழியங்கள் என்னென்ன?

வானகரம்:

Maduravoyal Vaanagaram Bypass Robbery:  நள்ளிரவுக் காட்டில் ஓநாய் கும்பலிடம் அந்த ஆடு சிக்கிக் கொண்டது. அதை வைத்து, ஓநாய் கும்பல் செய்த அட்டூழியங்கள் என்னென்ன ? இதில் யார் ஓநாய் ? யார் ஆடு ?!

நள்ளிரவு கும்மிருட்டில் பட்டென சாலையோரம் பெண் ஒருவர் லிப்ட் கேட்டால் உடனே உதவ வேண்டும் என்று தோன்றும்தானே. இந்த எண்ணத்தை மூலதனமாக கொண்டு வானகரம் பைபாஸில் சினிமா திரைக்கதைப் போல ஒரு அன்டர்கிரவுண்ட் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

மதுரவாயில் – தாம்பரம் பைபாஸ் சாலை வானகரம் டோல்கேட் அருகே பெண் ஒருவர் நேற்று இரவு ஒரு மணி அளவில் கார் ஒன்றில் லிப்ட் கேட்டுள்ளார. பெண் நிற்பதைக் கண்ட கார் ஓட்டுநர் உடனடியாக காரை நிறுத்தி அந்தப் பெண்ணை ஏற்றியுள்ளார். மீண்டும் காரை எடுக்க முற்பட்ட போது, சாலையோர இருட்டில் இருந்து மர்ம நபர்கள் சிலர் வெளியேறி மடமடவென காருக்கு முன் வந்து, டிரைவரின் கழுத்தில் கத்தி வைத்தனர். உடனடியாக பணத்தை எடுக்குமாறு டிரைவரிடம் மிரட்டியுள்ளனர்.

இந்தக் காட்சியைப் பார்த்த பின்னால் வந்த வாகனங்களின் டிரைவர்கள் உடனடியாக போலீஸாருக்குத் தகவல் அளித்தனர். அந்த நேரம் பார்த்து ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், சம்பவ இடத்திற்கு அருகிலேயே இருந்துள்ளனர். எனவே, உடனடியாக சம்பவ இடத்திற்கு போலீஸார் வந்துசேர்ந்தனர். அவர்களைக் கண்டதும், மர்ம நபர்கள் மீண்டும் சாலையோர புதருக்குள் மறைந்து தப்பித்தனர்.

ஆனால், அந்தப் பெண் மட்டும் காருக்குள் தனியாக சிக்கினார். அந்தப் பெண்ணை ஓட்டுநர் பத்திரமாக தப்பிக்க விடாமல் பிடித்துவைத்திருந்தார். போலீஸார் வந்ததும், அந்தப் பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த அந்தப் பெண்ணின் பெயர் சாந்தி என்பதும், அவர் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

சாந்தியின் முன்கதை!

வானகரம் டோல்கேட்டில் வழக்கம் போல பாலியல் தொழிலுக்காக வந்த சாந்தியை, இரவு நேரத்தில் மர்ம கும்பல் ஒன்று வழிமறித்துள்ளது. சாந்தியிடம் அத்துமீறிய அந்த கும்பல், சாந்தியை பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், அவ்வழியாக வரக்கூடிய வாகனங்களை லிப்ட் கேட்பதுபோல் நடித்து நிறுத்தச் சொல்லியும் சாந்தியை மிரட்டியுள்ளனர். அவர்களிடம் சிக்கிக் கொண்ட சாந்தி, நள்ளிரவில் லிப்ட் கேட்டுள்ளார். அதன்பிறகுதான் கொள்ளைச் சம்பவ முயற்சி அரங்கேறியுள்ளது.

தற்போது வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்களை சாந்தியின் வாக்குமூலம் கொண்டு போரூர் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதனிடையே, காரில் வசமாக சிக்கிக்கொண்ட சாந்தியை காரில் பிடித்துவைத்த ஓட்டுநரின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

                                                                                                               – நவீன் டேரியஸ்

Previous Post Next Post

Post Ads 1

 

Post Ads 2

 
 

Swiggy

When Hunger Calls, Swiggy Delivers!