சிவகங்கை:
குழந்தைகளின் உயிரை காப்பாற்ற பாம்புடன் போராடி நாய் உயிர்விட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் அருகே கீழப்பூங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவர் செவலை உள்பட 4 நாய்களை வளர்ந்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை வீட்டின் முன்பு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது நல்லபாம்பு ஒன்று வீட்டிற்குள் நுழைந்துள்ளது. அதை கண்ட செவலை நாய் பாம்பை விரட்ட குரைத்துள்ளது. ஆனால் அதற்கு பாம்பு அஞ்சாமல் முன்னோக்கி அடியெடுத்து வைத்தது.
அதைப் பார்த்த நாய், பாம்பை பாய்ந்து பிடித்து கடித்துள்ளது. இந்த மோதலில் பாம்பு கடித்ததில் நாய் மயங்கி விழுந்து பேச்சு மூச்சில்லாமல் போனது. அதை கண்ட குழந்தைகள் கத்தி கூச்சலிடவே வீட்டிற்குள் இருந்த பெரியவர்கள் வெளியே வந்து பார்த்தனர். மயங்கி கிடந்த செவலை நாயை மீட்டு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அப்போது நாய் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர் வருத்தம் தெரிவித்திருக்கிறார். வீட்டில் புகுந்த பாம்பை தடுக்க முயன்று உயிர் தியாகம் செய்த செவலை நாயை கண்டு சரவணன் குடும்பத்தினர் கதறி அழுதனர். பின்னர் அவர்கள், நாய் செவலைக்கு இறுதி மரியாதை செலுத்தி வீட்டின் பின்புறமே புதைத்தனர். குழந்தைகளின் உயிரை காப்பாற்ற பாம்புடன் போராடி நாய் உயிர்விட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
– Gowtham Natarajan