Cm Stalin Said I Will Be A Dictator : நாமக்கல்லில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது. எப்போதும் போல் இல்லாமல் இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உரையில் அனல் பறந்தது என்று திமுக நிர்வாகிகளே சொல்லும் அளவுக்கு அவரது உரை இருந்தது!.
பொதுவாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உரையில் பொறுமையும், பக்குவமும், நிதானமும் தென்படும். ஆனால், இன்று பொம்மை குட்டைமேடு பகுதியில் நடந்த மாநாட்டில் அவர் பேசிய உரையில், பக்குவமும், நிதானமும் இருந்தாலும் கூடவே கொஞ்சம் தூக்கலாக காரமும், வீரியமும், கடுகடுப்பும், அனலும் தெறித்ததாக திமுக நிர்வாகிகளே சொல்லும் அளவுக்கு முதலமைச்சரின் உரையிருந்தது. கட்சிக் கட்டுப்பாடு, ஒழுக்கம், திமுகவின் பாரம்பரியம், அதன் தியாம், உழைப்பு, தனது கடந்த கால கசப்புகள் என அனைத்து ஏரியாவையும் கலந்துகட்டி உரை நிகழ்த்தி இருக்கிறார்.
இந்த மாநாட்டில் முதலமைச்சரின் உரையில், பல இடங்களில் திமுகவினர் கைத்தட்டி ரசித்து ஆர்ப்பரித்தனர். இனி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையில் இருந்து உருவி எடுக்கப்பட்ட சில வரிகள்!.
‘பள்ளிப்படிப்பைவிட அரசியல் படிப்புதான் எனக்கு அதிக ஆர்வத்தைத் தந்தது. அரசியலில் எனக்கு பதவி வரவேண்டும், மாலை மரியாதை வரவேண்டும் என்பதற்காக வரவில்லை. மக்கள் பணியாற்ற வேண்டும், இந்த நாட்டு மக்களுக்காக உழைக்க வேண்டும் என்பதற்காகத்தான், அந்த முடிவுக்கு வந்தேன்’
‘1989-ம் ஆண்டில்தான் முதன்முதலாக சட்டமன்றத்திற்குள் நுழைந்தேன். இதற்காக 12 ஆண்டுகள் உழைத்தேன். எதற்காக இதைக் கூறுகிறேன் என்றால், பொறுப்புகள் உடனடியாக கிடைத்துவிடாது. அதற்கு கடுமையாக உழைக்க வேண்டும். பொறுப்புகளுக்காக காத்திருக்க வேண்டும்’
‘பதவிகளுக்கோ, பொறுப்புகளுக்கோ வருவது முக்கியமல்ல. அதனை தக்கவைத்துக் கொள்வதுதான் முக்கியம். பொறுப்புக்கு வந்துள்ள நீங்கள் பொறுப்பாக நடந்துகொள்ளுங்கள்’
‘உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கான சக்தியை மக்களுக்காக மட்டும் நீங்கள் பயன்படுத்துங்கள். திமுக ஆட்சிக்கு வந்தபின்னர் ஒளி உருவாகியிருக்கிறது. இதற்கு காரணம், ஓராண்டு காலத்தில் நான் இட்ட கையெழுத்துகள்’
‘புதிதாக பொறுப்புக்கு வந்திருக்கக்கூடிய பெண்களுக்கு பயமோ, தயக்கமோ, கூச்சமோ இருக்கக்கூடாது. உங்களுக்குத் தரப்பட்ட பொறுப்பை உங்கள் கணவரிடத்தில் நீங்கள் ஒப்படைத்துவிடாதீர்கள். நீங்கள் தன்னிச்சையாக செயல்பட வேண்டும்.’
‘உள்ளாட்சிப் பிரதிநிதிகள் சட்டப்படி, விதிமுறைப்படி, நியாயத்தின்படி மக்களுக்காக நடந்துகொள்ள வேண்டும். இதனை மீறுபவர்கள் மீது கட்சி ரீதியான நடவடிக்கை மட்டுமல்ல, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.’
‘ஒழுங்கீனமும், முறைகேடும் தலைதூக்குமானால் நான் சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுப்பேன். நாம் ஒன்றும் ஆட்சிக்கு சும்மா வந்துவிடவில்லை. தங்க தாம்பூலத்தில் வைத்து இந்த ஆட்சியை தமிழக மக்கள் நமக்கு தந்துவிடவில்லை. 50 ஆண்டு காலமாக உழைத்த உழைப்பின் பலன் இது. கோடிக்கணக்கான திமுக தொண்டர்களின் தன்னமலற்ற உழைப்பால் கிடைத்த பலன் இது. என்னை நம்பி கோடிக்கணக்கான தொண்டர்கள் இந்த கட்சியை என்னிடம் ஒப்படைத்துள்ளனர். கோடிக்கணக்கான தமிழக மக்கள் என்னை நம்பி இந்த ஆட்சியை ஒப்படைத்துள்ளனர். தமிழகத்தின் எதிர்காலம் திமுகவின் கையில்தான் ஒப்படைக்கப்பட்டுள்ளது”
‘எங்கோ யாரோ செய்யும் சில தவறுகளால் தமிழ்நாட்டின் முதலமைச்சரான நானும், கோடான கோடி திமுக தொண்டர்களும் அவமானத்தால் தலைகுனியக்கூடிய நிலையை உருவாக்காமல் இருக்க உங்கள் அனைவரின் மலர்பாதங்களைத் தொட்டு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்!.’
– நவீன் டேரியஸ்