"மிஸ்டர் ஹிட்லர் இது ஜெர்மனி அல்ல! மன்னராட்சி முறையை கொண்டுவரத் துடிக்கிறீர்களோ?" - கமல்ஹாசன் கண்டனம்.!

சென்னை:

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பிரதமர் நரேந்திர மோடியை ‘ஹிட்லர்’ என விமர்சித்திருக்கிறார்.

நாடாளுமன்ற அவைகளில் பேசக்கூடாத வார்த்தைகள் பட்டியலை ஒன்றிய அரசு இன்று வெளியிட்டது. அதில் ஊழல், துரோகம், சர்வாதிகாரி என்ற வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு பலதரப்பிலும் கண்டனக் குரல்கள் எழுந்துவரும் நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் பிரதமர் நரேந்திர மோடியை ஹிட்லர் என்று கடுமையாக விமர்சித்திருக்கிறார். அந்த அறிக்கை பின்வருமாறு.,

“நாடாளுமன்ற இரு அவைகளிலும் ஊழல், நாடகம், திறமையற்றவர், அராஜகவாதி, சர்வாதிகாரம், வெட்கக்கேடு, துரோகம் செய்தார், வாய்ஜாலம் காட்டுபவர், அழிவு சக்தி, சர்வாதிகாரி உள்ளிட்ட வார்த்தைகளை எல்லாம் தடை செய்யப்பட்ட வார்த்தைகள் என்று பட்டியலிட்டு, மக்களவைச் செயலாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இந்த வார்த்தைகளை எம்.பி.க்கள் பயன்படுத்தினால், அவைக்குறிப்பில் இருந்து நீக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பேச்சுரிமைக்கு எதிரான இந்நடவடிக்கை, ஜனநாயக குரல்வளையை நசுக்கும். தவறுகளை சுட்டிக்காட்டவோ, விமர்சனம் செய்யவோ இடமளிக்காதது குடியரசையும், அரசியலமைப்பையும் கேலிக்கூத்தாக்கும்.

பிரதமர், அமைச்சர்களுக்கு எதிராக யாரும் பேசக்கூடாது என்று கருதுவது ஆபத்தானது. பாராட்டுகளை மட்டுமே கேட்டுக் கொண்டிருக்க மன்னராட்சி முறை நடக்கிறதா? வள்ளுவரைப் பற்றிப் பேசும் பிரதமருக்கு ‘இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்’ கதியை சுட்டிக்காட்ட யாருமில்லையா? ஹிட்லராக மாற இது ஜெர்மனி அல்லவே!”

இவ்வாறு மக்கள் நீதிமய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

                                                                                                                     – அதிரா ஆனந்த்

Previous Post Next Post

Post Ads 1

 

Post Ads 2

 
 

Swiggy

When Hunger Calls, Swiggy Delivers!