சிறுமியிடம் இருந்து மாதந்தோறும் கருமுட்டை எடுத்தது அம்பலம்.!

ஈரோடு:

ஈரோடு சிறுமியிடம் சினைமுட்டை எடுத்த விவகாரம் முறைகேடாக செயல்பட்ட 4 மருத்துவமனைகளையும் நிரந்திரமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக வழக்கில் விசாரணையின் இறுதி அறிக்கையை குழு சமர்ப்பித்துள்ளது, விசாரணை அதிகாரிகள் கேட்ட அனைத்து ஆவணங்களும் மருத்துவமனைகள் தரவில்லை; அறிக்கையில் நிறைய தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.  சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் ஈரோடு சினைமுட்டை விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.  அப்போது பேசிய அவர்,  “ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமியின் சினை முட்டையை எடுத்து வணிக ரீதியில் விற்பனை செய்யபட்டு வருவதாக செய்தி வெளியானது, செய்தி வெளியானவுடன் இணை இயக்குநர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.  அந்த குழு சிறுமியை நேரில் சந்தித்து விசாரணை மேற்கொண்டனர், விசாரணையில் சிறுமியின் பெற்றோர்களே முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், ஈரோடு மற்றும் சேலம் மாவட்டத்தில் உள்ள சுதா மருத்துவமனை, ஓசூரில் விஜய் மருத்துவமனை, பெருந்துறையில் உள்ள ராமபிரசாத் , ஆந்திரா மாநிலம் திருப்பதியில் உள்ள MATHRUTVA TEST TUBE BABY CENTRE மற்றும் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஶ்ரீ கிருஷ்ணா மருத்துவமனை என 6 மருத்துவமனைகள் கரு முட்டை விவகாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அதன் பின் இந்த விவகாரம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் உட்பட இந்திராணி, சையது அலி, ஜான் இடைத்தரகர் மாலதி என 4 நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் சிறையில் சென்று நேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.  சிறுமியின் உண்மையான வயது 16 என்றும் அவருடைய உண்மையான வயது மற்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டு பதிவு செய்யப்பட்டு உள்ளது.  ஆதார் அட்டை போலியாக தயார் செய்துள்ளனர் என தெரிந்தும் 6 மருத்துவமனைகள் தவறாக செயல்பட்டு உள்ளது.  சிறுமியின் பெற்றோர்களே குற்றத்தில் ஈடுபட்டு உள்ளனர், தகுந்த கல்வி தகுதி இல்லாத ஆலோசகர் ஆலோசகராக செயல்பட்டு உள்ளார் என்றும் தெரிய வந்துள்ளது.

சமந்தப்பட்ட சிறுமியிடம் சினை முட்டை எடுப்பதில் உள்ள சாதக பாதகங்கள் தெரிவிக்கப்படவில்லை.  சிறுமியிடம் இருந்து பல முறை சினை முட்டைகளை எடுத்துள்ளனர். ஒரே மாதத்தில் பல முறை எடுத்துள்ளனர்.  சினை முட்டை வழங்க வேண்டும் என்றால் சினை முட்டை வழங்கும் பெண்ணின் வயது 21 வயது முதல் 35 வயது வரை இருக்க வேண்டும், ஒரு குழந்தை பெற்ற பின் ஒரு முறை மட்டுமே சினை முட்டை கொடுக்க முடியும், ஆனால் எந்த ஒரு விதிமுறையும் பின்பற்றாமல்  தவறு நடைபெற்று உள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது என கூறினார்.  இவ்வாறு தொடர் குற்றங்களில் ஈடுபட்ட மருத்துவமனைகள் மீது உட்சபட்ச நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்த அவர் தமிழகத்தில் இந்த விவகாரத்தில் ஈடுபட்ட 4 மருத்துவமனைகளில் செயல்பட்டு வரும் ஸ்கேன் சென்டர்களை உடனடியாக மூடவும்,15 நாட்களுக்குள் அந்த மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் அனைவரையும் டிஸ்சார்ஜ் செய்துவிட்டு மருத்துவமனையை நிரந்திரமாக மூடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

மேலும் இந்த விவகாரத்தில் ஈடுபட்டுள்ள வெளி மாநிலங்களை சார்ந்த இரண்டு மருத்துவமனைகள் மீது நடவடிக்கை துறையின் செயலாளர் கடிதம் எழுதி உள்ளார். சுதா மற்றும் விஜய் மருத்துவமனை முதல்வர் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது, அவை முதல்வர் காப்பீடு திட்டத்தின் செயல்படும் மருத்துவமனை பட்டியலில் இருந்து நீக்கப்படுகிறது.   இந்த விவகாரத்தில் ஈடுபட்ட நபர்களுக்கு அதிகபட்சமாக 50 லட்சம் ரூபாய் அபராதமும் 10 ஆண்டுகள் சிரையும் கிடைக்க வாய்ப்புள்ளது” என தெரிவித்த அவர் தமிழகத்தில் செயல்பட்டு வரும் கருத்தரிப்பு மையங்கள் முறையாக செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.  மேலும் பேசிய அமைச்சர் மத்திய அரசின் அறிவிப்பு இன்று பிற்பகலில் வெளியானதும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம் நாளை முதல் நடைபெறும். முதலமைச்சர் நலமுடன் உள்ளார் என்றும்  மக்களுக்கான பணியில் ஓய்வில்லாமல் தொடர்ச்சியாக மக்களை சந்தித்து வந்ததால் லேசான அறிகுறியுடன் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

                                                                                                                              – RK Spark 

Previous Post Next Post

Post Ads 1

 

Post Ads 2

 
 

Swiggy

When Hunger Calls, Swiggy Delivers!