இந்தியா:
பாஜகவின் முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவின் சர்ச்சைக்குரிய பேச்சால் இந்தியா மீது ஹேக்கர்கள் சைபர் தாக்குதலை தொடங்கி உள்ளனர். நுபுர் சர்மா தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இஸ்லாமிய இறைத்தூதர் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து தற்போது அசாமில் உள்ள ஒரு செய்தி சேனல் உள்பட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இணையத்தள பக்கங்கள் ஹேக் செய்யப்பட்டன. பாகிஸ்தான் கொடியுடன் நபிகள் நாயகத்தை மதிக்க வேண்டும் என்ற வார்த்தைகளும் அந்த செய்தி சேனலில் ஒளிபரப்பாகியுள்ளது.
இதனை உறுதி செய்துள்ள அகமதாபாத் குற்றப்பிரிவு போலீசார் மலேசியா, இந்தோனேசியாவை சேர்ந்த ஹேக்கர்கள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மலேசியா மற்றும் இந்தோனேசியா அரசுகளுக்கு அகமதாபாத் குற்றப்பிரிவு போலீஸ் கடிதம் எழுதியுள்ளது. இந்த 2 ஹேக்கர் குழுக்களும், இந்தியா மீது இணையதள தாக்குதலை தொடங்கி நடத்தும்படி உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம் ஹேக்கர்கள் குழுவினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன. இதுதவிர, அரசாங்கம் மற்றும் தொழிற்சாலைகளின் பல்வேறு வலைதளங்களும் முடக்கப்பட்டு உள்ளன. மேலும் ஆந்திர பிரதேச போலீசார் மற்றும் அரசின் தகவல்களை கசிய விட்டு உள்ளனர். பான் மற்றும் ஆதார் விவரங்களும் வெளியிடப்பட்டு உள்ளன. தானே போலீசாரின் வலைதளமும் முடக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
– Prabhanjani Saravanan