அவிநாசி:
நாடு முழுதும், 200 கோடி தடுப்பூசி நிறைவு மற்றும் விவேகானந்தர் நினைவு தினத்தை முன்னிட்டு, திருப்பூர் சுகன்சுகா மெடிக்கல் சென்டர், சாய்கிருபா ஸ்போர்ட்ஸ் அகாடமி, திருப்பூர் வடக்கு மாவட்ட பா. ஜ. , மருத்துவர் அணி சார்பில், ‘விவேகானந்தர் மராத்தான் போட்டி – 2022’ நேற்று நடந்தது.
அவிநாசி அடுத்த பழங்கரை, எஸ். கே. எல். , பப்ளிக் பள்ளி மைதானத்தில், பத்து பிரிவுகளில் நடந்த போட்டியில் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த 1, 500 பேர் பங்கேற்றனர். திருப்பூர் வடக்கு மாவட்ட பா. ஜ. , தலைவர் செந்தில்வேல் தலைமை வகித்தார். சுகன்சுகா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் கார்த்திகை சுந்தரன் வரவேற்றார்.
ஆர்ம்ஸ்ட்ராங் நிறுவன சேர்மன் பழனிசாமி, பா. ஜ. , மாநில பொது செயலாளர் முருகானந்தம், எஸ். கே. எல். , பப்ளிக் பள்ளி நிர்வாக இயக்குனர் கோவிந்தசாமி, வடக்கு மாவட்ட பொது செயலாளர் சீனிவாசன், விவேகானந்தா சேவாலயம் நிர்வாக அறங்காவலர் செந்தில்நாதன், மாநில பா. ஜ. , மருத்துவரணி பார்வையாளர் டாக்டர் விஜயபாண்டியன், மாநில மருத்துவரணி செயலாளர் செந்தில்நாதன், திருப்பூர் வடக்கு பொருளாளர் நடராஜ், வடக்கு மாவட்ட பொது செயலாளர் தங்கராஜ், திருப்பூர் மாவட்ட பார்வையாளர் செல்வக்குமார் ஆகியோர் பல்வேறு வயது மற்றும் பிரிவுக்கான மராத்தான் போட்டிகளை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
மருத்துவமனை நிர்வாக இயக்குனர் கார்த்திகை சுந்தரன், பா. ஜ. , விளையாட்டு இளைஞர் நலப்பிரிவு மாநில தலைவர் அமர்பிரசாத்ரெட்டி, மாநில மருத்துவரணி தலைவர் பிரேம்குமார், மாநில நிர்வாகிகள் சுதாமணி, ஜெகதீஸ்வரி உள்ளிட்டோர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். 83 வயதான வெங்கடேசன், போட்டியில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகளான கலைச்செல்வன் (பெரம்பலுார்), ரம்யா (புதுக்கோட்டை) ஆகியோருக்கு சிறப்பு பரிசு வழங்கி ஊக்குவிக்கப்பட்டது. நாச்சியார் பேரவை ஆனந்தி நன்றி கூறினார்.
-ஜெனோ