நாமக்கல்:
நாமக்கல் பூங்கா சாலையில் மத்திய அரசின் 8 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, துணை தலைவர்கள் வி.பி.துரைசாமி, கே.பி. ராமலிங்கம் ஆகியோர் கலந்து மத்திய அரசின் சாதனைகள் குறித்து எடுத்துரைத்தனர். இதன்பின் கூட்டம் முடிவடைந்து அண்ணாமலை மேடையில் இருந்து கீழே இறங்கினார்.
அப்போது செய்தியாளர்கள் அவரிடம் கேள்விகளை கேட்க அண்ணாமலை தற்போது பேட்டி ஏதும் இல்லை என தெரிவித்து காரில் ஏற முற்பட்டார். அச்சமயம் அங்கிருந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர், ராஜா என்பவர் அவரிடம் பேட்டி எடுக்க முயன்றுள்ளார். அப்போது அண்ணாமலையுடன் இருந்த பா.ஜ.க வினர் செய்தியாளரை பேட்டி எடுக்க விடாமல் தடுத்துள்ளனர். மேலும் அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அதோடு மட்டுமல்லாமல் செய்தியாளரை ஒருமையில் திட்டியுள்ளனர். இதையடுத்து அங்கிருந்த போலிஸார் அவர்களை தடுத்து நிறுத்தி பா.ஜ.கவினரிடம் இருந்து செய்தியாளரை மீட்டுள்ளனர். செய்தியாளரை தாக்கிய பா.ஜ.கவினருக்கு பத்திரிகையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளர். மேலும் செய்தியாளரை தாக்கிய பா.ஜ.கவினர் மீது காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பத்திரிகையாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
-Pradeep