ஓபிஎஸ், இபிஎஸ் கூறுவது மட்டும்தான் அதிகாரப்பூர்வமானது. அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் பேசுவது பற்றி பாஜக கவலைப்படாது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
அதிமுகவின் அம்மா பேரவை மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அதில் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான பொன்னையன், “தமிழ்நாட்டில் அதிமுகதான் எதிர்க்கட்சி. ஆனால் பாஜக தன்னை எதிர்க்கட்சியாக முன்னிறுத்த பார்க்கிறது. அதை முறியடிக்க வேண்டும். இதற்கு இணையத்தில் அதிமுகவின்ஐடி விங் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம்” என்று பேசினார்.
அவரது பேச்சு அதிமுக – பாஜக கூட்டணிக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதேசமயம் பொன்னையன் பேசியது அவரது சொந்தக் கருத்து என ஓபிஎஸ்ஸும், இபிஎஸ்ஸும் கூட்டாக தெரிவித்தனர்.
இந்நிலையில் தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேசுகையில், “அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் இருக்கு உறவில் எந்தவித குழப்பமும் இல்லை. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூறும் கருத்துக்கள் மட்டும்தான் அதிகாரப்பூர்வமானது.
அந்தக் கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் சொல்லக்கூடிய கருத்துக்கள் அவர்களுடைய சொந்த கருத்துக்கள்; அதுகுறித்து பாஜகவுக்கு கவலையில்லை” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “பொங்கல் தொகுப்பில் முறைகேடுகள் செய்த நிறுவனங்களுக்கே மீண்டும் ஊட்டசத்து பொருட்கள் டெண்டர் வழங்கி இருப்பது எந்த விதத்தில் நியாயம்.
ஆவின் நிறுவனத்திற்கு டெண்டர் கொடுக்காமல் தனியார் நிறுவனத்திற்கு டெண்டர் வழங்குவதினால் அரசுக்கு 77 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பொங்கல் தொகுப்பு தரம் இல்லாமல் வழங்கிய டெண்டர் நிறுவனங்களுக்கு இனி டெண்டர்கள் வழங்கப்படாது என்று கூறிய தமிழ்நாடு முதலமைச்சர் ஏன் இப்போது ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கும் டெண்டரை மீண்டும் அதே நிறுவனங்களுக்கு டெண்டர் வழங்கியுள்ளார்.
ஊட்டச்சத்து டெண்டரை மீண்டும் அதே நிறுவனங்களுக்கு வழங்க 100-கோடி ரூபாய் பணம் சுகாதாரத் துறை அமைச்சருக்கு கமிஷன் கொடுக்கப்பட்டிருக்கிறது” என்று பேசினார்.
– க. விக்ரம்