"நலமாக இருக்கிறேன் பதற்றப்பட வேண்டாம்" - முதலமைச்சர் கடிதம்..!

சென்னை:

தான் நலமாக இருப்பதாகவும் யாரும் பதற்றப்பட வேண்டாம் எனவும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக தொண்டர்களுக்கும், மக்களுக்கும் அவர் எழுதியிருக்கும் கடிதத்தில், “தொடர்ச்சியான பணிகள் – தட்பவெப்ப மாற்றம் ஆகியவற்றால் உங்களில் ஒருவனான எனக்கு இலேசான காய்ச்சல் ஏற்பட்டதன் காரணமாக, இன்று (20-6-2022) ராணிப்பேட்டை மாவட்டத்திலும், நாளை (21-6-2022) திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களிலும் பங்கேற்க வேண்டிய நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. அத்துடன், நேற்று (19-6-2022வி.பி.ராமன் அவர்களைப் பற்றிய நூல் வெளியீட்டு விழாவில் நான் பங்கேற்க இயலாத நிலையில், என்னுடைய உரையினை பொதுச் செயலாளர் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் படித்தார்.

உங்களில் ஒருவனான என் மீது அன்புகொண்ட உடன்பிறப்புகளும், தோழமை இயக்கத்தினரும், அரசியல் பிரமுகர்களும், பல துறைகளைச் சேர்ந்தவர்களும் பதற்றத்துடன் உடல்நலன் குறித்து விசாரிக்கத் தொடங்கிவிட்டார்கள். என் மீதான அவர்களின் அன்புதான் அந்தப் பதற்றத்திற்கான காரணம் என்பதை அறிவேன்.

எனினும், பதற்றப்பட வேண்டிய அளவில் எதுவும் இல்லை. இலேசான காய்ச்சல் என்பதால் மருத்துவர்கள் அறிவுரைப்படி அதற்குரிய மருந்துகளுடன், கொஞ்சம் ஓய்வும் எடுக்க வேண்டியதாகிவிட்டது. இன்றும் நாளையும் சற்று ஓய்வெடுக்கும் வாய்ப்பு அமைந்தால் அதன்பின் எப்போதும் போல பணியினைத் தொடர்ந்திட முடியும். நலமாகவே இருக்கிறேன். பணிகளைத் தொடர்ந்திடுவேன்.

ஓய்விலும் அத்தியாவசியப் பணிகளை மேற்கொண்டுதான் வருகிறேன். நேற்றிரவு சென்னையில் பெய்த திடீர் மழையால், எந்த இடத்திலாவது தண்ணீர் தேங்கியுள்ளதா, வடிகால் அமைப்பு பணிகளில் பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டிருக்கிறதா என்பது குறித்து அதிகாலையிலேயே அதிகாரிகளுடன் ஆலோசித்து விவரங்களைத் தெரிந்துகொண்டேன்.

ஒரு சில இடங்களில், வடிகால் கட்டமைப்புப் பணிகளில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்ற வேண்டிய சூழல் இருப்பதையும், அதற்கான பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டிருப்பதையும் தெரிந்துகொண்டு, அவற்றை விரைந்து முடிக்குமாறு பணித்துள்ளேன்.

மக்களின் தேவைகளை, அவர்களுக்கான வசதிகளை நிறைவேற்ற வேண்டிய முதலமைச்சர் என்ற பொறுப்பைச் சுமந்துள்ள நிலையில், அந்தப் பொறுப்பை வழங்கியது, திமுக எனும் பேரியக்கத்தின் வெற்றிதான் என்பதை நான் ஒரு நொடிப் பொழுதும் மறந்ததில்லை. கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளாகிய உங்களின் உழைப்பில் கிடைத்த வெற்றியால், திமுக தலைவர் என்ற பொறுப்பைத் தோளில் சுமந்திருக்கும் உங்களில் ஒருவனான நான் முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுள்ளேன். திமுக கட்டமைப்பு வலிவோடும் பொலிவோடும் இருந்தால்தான் தமிழ்நாட்டு மக்களுக்குத் தொடர்ந்து நாம் பணியாற்றிட முடியும்.

உட்கட்சி ஜனநாயகமே ஓர் இயக்கத்தின் வேர்களைப் பலப்படுத்தும். இந்தியாவில் உட்கட்சி ஜனநாயகத்தில் பலமிக்க அரசியல் கட்சியாக விளங்கும் திமுகவில் ஒன்றிய அமைப்புகளுக்குத் தேர்தல்கள் நடைபெற்று, நிர்வாகிகள் தேர்வு பெற்று வருகின்றனர். பெரும்பாலான ஒன்றியங்களில் தேர்தல் நிறைவடைந்துள்ளது.

பெரும்பாலும் அமைதியாகவும் இணக்கமாகவும் நடைபெற்றுள்ளது என்பது உங்களுக்கும், உங்களில் ஒருவனான எனக்கும் மகிழ்ச்சியும் நிம்மதியும் தரும் செய்தியாகும். பொதுவாகவே, திமுகவின் உள்கட்டமைப்புக்கான தேர்தல் என்பது உடன்பிறப்புகளின் ஆரோக்கியமான போட்டியாக அமைவது வழக்கம்.

ஆரோக்கியமாகத் தொடங்கும் இந்தப் போட்டி, ஒரு சில நேரங்களில், ஒரு சில இடங்களில் கொஞ்சம் அதீதமான ஆர்வத்தின் வெளிப்பாட்டால் விரும்பத்தகாத நிகழ்வுகளுக்குக் கொண்டு செல்வதும் உண்டு. இந்த முறை அதற்கும்கூட பெரியளவில் இடம் அளிக்காமல், தலைமைக் கழகத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் தங்கள் பணியைச் செவ்வனே மேற்கொண்டிருப்பதும் கட்சிக்கு மேலும் சிறப்பு சேர்த்துள்ளது.

ஒரு சில ஒன்றிய எல்லைகள் புதிதாக வரையறை செய்யப்பட்டுள்ள நிலையில், ஒன்றியக் கழக அமைப்புகளுக்கான தேர்தல் முழுமை பெற்றதும், மாவட்டக் கழகங்களுக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. அந்தத் தேர்தலிலும் கட்டுக்கோப்பும் ஒற்றுமையும் மேலோங்கிடும் வகையில், கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் நாங்கள் என்பதைக் காட்டிடும் முறையில் உங்களின் பங்களிப்பு இருக்கும் என்று திடமாக நம்புகிறேன். தனி மனிதர்களின் விருப்பத்தைவிட இயக்கத்தின் உறுதித்தன்மையே மேலானது – உயர்வானது என்பதை கலைஞரிடம் நாம் கற்றிருக்கிறோம். அந்தப் பாடத்தை மறக்காமல், நம் பணியினைத் தொடர்வோம்.

ஓர் இயக்கத்திற்கு உட்கட்சி ஜனநாயகம்தான் அடித்தளம் என்றால், ஒரு நாட்டிற்கு உள்ளாட்சி ஜனநாயகமே ஆணிவேராகும். தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான அரசு அமையும்போதெல்லாம் மாநகரங்கள் முதல் கிராமங்கள்வரை உள்ளாட்சி ஜனநாயகம் பலப்படுத்தப்படுவது வழக்கமான ஒன்று.

சென்னை மாநகராட்சியின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் என்ற பெருமையைப் பெற்ற உங்களில் ஒருவனான எனக்கு உள்ளாட்சி நிர்வாகத்தின் முக்கியத்துவம் முழுமையாகத் தெரியும். கலைஞர் ஐந்தாவது முறையாகத் தமிழ்நாட்டின் முதலமைச்சர் பொறுப்பினை ஏற்றபோது, உள்ளாட்சித்துறை அமைச்சராகும் வாய்ப்பினை எனக்கு வழங்கினார்கள்.

இன்று முதலமைச்சர் என்ற பொறுப்பில் அமர்ந்து, மாநிலத்தின் நலனுக்காகவும் உரிமைக்காகவும் பாடுபடும் அதேநேரத்தில், உள்ளாட்சி ஜனநாயகம் தழைப்பதற்கான பணிகளை மேற்கொள்வதிலும் உறுதியோடு இருக்கிறேன். கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் உள்ளாட்சி ஜனநாயகம் என்ன பாடுபட்டது என்பதை நாடறியும். முழுமையாகத் தேர்தலை நடத்தாமல் காலங்கடத்திவிட்டு, கடைசி நேரத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்களை மட்டும் நடத்தினார்கள்.

அதிலும்கூட, அன்றைய எதிர்க்கட்சி நிலையிலிருந்த திமுக அதிகளவில் வெற்றி பெற்று சாதனை படைத்தது. அதன்பின், கழக ஆட்சி அமைந்ததும் 9 மாவட்டங்களில் நடைபெறாமல் இருந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல்களை நடத்தியபோது, பெரும் வெற்றியை மக்கள் நமக்கு வழங்கினார்கள். அதுபோலவே, திமுக ஆட்சியில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என அனைத்து நிலைகளிலும் திமுகவும், தோழமைக் கட்சிகளும் ஏறத்தாழ 95 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட அளவில் வெற்றியைப் பெற்றுள்ளன.

திமுக சார்பில் பொறுப்பேற்றுள்ள, நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு வரும் ஜூலை 3-ஆம் நாளன்று நாமக்கல்லில், உள்ளாட்சியிலும் நல்லாட்சி என்ற தலைப்பில் நடைபெற இருக்கிறது. திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு முன்னிலையில், அதற்கான பணிகளை மாவட்ட திமுக செயலாளரும் / பொறுப்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் சிறப்பான முறையில் மேற்கொண்டு வருகிறார். உங்களில் ஒருவனான நான் இந்த மாநாட்டிற்குத் தலைமை தாங்கும் வாய்ப்பினைப் பெற்றிருக்கிறேன்.

திமுக சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சித் தலைவர்கள், துணைத் தலைவர்கள், பேரூராட்சித் தலைவர்கள், துணைத் தலைவர்கள், நகர்ப்புற உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் இந்த மாநாட்டில் பங்கேற்று, மக்கள் பணியைத் தொய்வின்றி ஆற்றுவதற்கான திமுக சார்பில் வழிகாட்டு நெறிமுறைகளைப் பெறவிருக்கிறார்கள்.

உள்ளாட்சி அமைப்புகளில் முதன்முதலில் பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கி அவர்களுக்கு ஆட்சித் திறனுக்கான அதிகாரமளித்தவர் தலைவர் கலைஞர் அவர்கள். அவர் வழியில் நடைபெறும், உங்களில் ஒருவனான என் தலைமையிலான அரசு, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கி, ‘ஆணுக்குப் பெண் இளைப்பில்லை காண்’ என்பதை நிரூபித்திருக்கிறது.

நாமக்கல்லில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாட்டில் சரிபாதி அளவிலும், ஏன் அதற்குச் சற்று கூடுதலான அளவிலும் பெண் பிரதிநிதிகள் பங்கேற்கவிருக்கிறார்கள். வீட்டைக் காப்பதுபோல நாட்டைக் காக்கும் திறன்மிக்க மகளிருக்கு நிர்வாகப் பயிற்சிக் களமாக இந்த மாநாடு அமையவிருக்கிறது.

அனைவருக்கும் அனைத்தும் என்கிற திராவிட மாடலின் அடிப்படையில் அனைத்து நிலைகளிலும் ஜனநாயகம் தழைத்திட வேண்டும் என்பதே நமது குறிக்கோள். குக்கிராமத்தில் தொடங்கி தலைநகரம் வரை உள்ளாட்சியில் நல்லாட்சி திறம்பட நடைபெற்றால்தான் ஒட்டுமொத்த மாநிலத்தின் கட்டமைப்பும் வளர்ச்சியும் சிறப்பாக அமையும்.

அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு முதலிடம் பெற வேண்டும் என்பதே நமது இலக்கு. அதனால்தான், ஓய்வெடுக்க வேண்டி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ள நாளிலும், ஓய்வின்றி சிந்தித்து, அதனைச் செயல்படுத்துவதற்கான வழிகளை ஆராய்ந்து, இலக்கை அடைவதில் முனைப்பாக இருக்கிறேன்.

இரண்டொரு நாட்களில் மீண்டும் உற்சாகத்துடனும் உத்வேகத்துடனும் அரசுப் பணிகளையும் கட்சியின் செயல்பாடுகளையும் வழக்கம்போலத் தொடர்ந்திட ஆயத்தமாக இருக்கிறேன். ஓய்வில்லை நமக்கு. முதலிடமே இலக்கு. உடன்பிறப்புகளாம் உங்களுடைய பேரன்பின் பலம் கொண்டு, அந்த இலக்கை அடைவதற்கான செயல்பாடுகள் தொடர்ந்துகொண்டே இருக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.

                                                                                                                                  – க. விக்ரம்

 

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Travel with us!

News Editor's/Reporter's can join with our Desk Team. Publish your news now on 24×7. Reachout with your contact through editor@ipdtamil.com