கொடுங்கையூர்:
கொடுங்கையூர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் விசாரணை கைதி ஒருவர் அடித்துக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் வேட்டைக்கார பாளையத்தைச் சேர்ந்தவர் சவுரி ராஜன். இவருக்கு ராஜசேகர் (எ) அப்பு எனும் மகன் இருந்தார்.
30 வயதான ராஜசேகரனை பல்வேறு குற்ற வழக்குகளில் காவல் துறையினர் தேடியதாக கூறப்படுகிறது. இதற்கிடையே ஏற்கனவே கைது செய்யப்பட்ட ராஜசேகரனை அவரது தாயார் ஜாமீனில் எடுத்துள்ளார். ஜாமீனில் வெளிவந்த ராஜசேகரன் வீட்டாருடன் சண்டைப்போட்டுவிட்டு சென்றுவிட்டதாக தெரிகிறது.
இந்தச் சூழலில் கொடுங்கையூர் காவல் துறையினர் அவரை கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து அடித்ததாக தெரிகிறது.
இன்று காலை அடி தாங்க முடியாமல் அப்பு மயக்க நிலைக்கு சென்றதாகவும், உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு அவரை காவல் துறையினர் அழைத்து சென்றதாகவும் தெரிகிறது. ஆனால் அவர் மருத்துவமனையில் வைத்து அவர் உயிரிழந்துவிட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து உயிரிழந்த ராஜசேகரனின் தாயாரிடம் ஜீ தமிழ் செய்திகள் சார்பில் பேசியபோது, “ராஜசேகரனை ஜாமீனில் எடுத்தேன். ஆனால் சண்டைப்போட்டுவிட்டு வீட்டை விட்டு சென்றுவிட்டார். இந்தச் சமயத்தில் காவல் துறையினர் இப்போது எனக்கு ஃபோன் செய்து ராஜசேகரனின் குடும்பம் எங்கு இருக்கிறது என கேட்டுவிட்டு ஃபோனை வைத்துவிட்டனர்” என்றார்.
தற்போது ராஜசேகரன் காவல் நிலையத்தில் மரணமடைந்திருக்கிறார் என வெளியாகியிருக்கும் தகவல் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், அதிமுக ஆட்சிக்காலத்தில் தூத்தக்குடியில் ஜெயராஜ், பென்னிக்ஸ்,ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பதற்கேற்ப திமுக ஆட்சியில் விக்னேஷ் லாக் அப் டெத் என தொடர்ந்து காவல் நிலைய மரணங்கள் நடந்துவருகின்றன.
தற்போது மீண்டும் ஒரு லாக் அப் டெத் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு தமிழ்நாடு காவல் துறை உரிய பதில் சொல்லியாக வேண்டுமென சமூக செயற்பாட்டாளர்கள் கூறிவருகின்றனர்.
– க. விக்ரம்