மதுரை:
மதுரை புதூர் அருகேயுள்ள ஜவஹர்புரம் பகுதியில் வைத்தியநாதன் என்பவர் நகை அடகுக்கடை நடத்தி வருகிறார். இன்று காலை வழக்கம்போல் கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த நகை லாக்கர் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து காவல்நிலையத்தில் அவர் புகார் அளித்தார்.
உடனே சம்பவ இடத்திற்கு வந்த புதூர் போலீசார் விசாரணை நடத்தினர். அடகுக்கடைக்கு சுமார் 1 கி.மீ தொலைவில் உள்ள குப்பைத்தொட்டியில் நகை லாக்கர் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த தூய்மைப் பணியாளர்கள் அதை போலீசாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர்.
மேலும் காவல்துறை நடத்திய விசாரணையில் கொள்ளையடித்த மர்ம நபர்களால் லாக்கரை உடைக்கமுடியாத நிலையில் லாக்கரை ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள குப்பைத் தொட்டியில் வீசிச் சென்றது தெரியவந்துள்ளது. மேலும் லாக்கரில் அரை கிலோ தங்க நகை மற்றும் 21 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணமும் இருந்தது தெரியவந்துள்ளது.