"சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துக" - அரசுக்கு சீமான் வலியுறுத்தல்..!

 

சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வஏண்டுமென நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமார் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு விரைவில் நடத்தப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. சரியான நேரத்தில் அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் இந்நடவடிக்கையை முன்னெடுத்த அம்மாநில அரசிற்கு பாராட்டுகளை தெரிவிக்கிறேன்.

ஆண்டாண்டு காலமாகப் பிறப்பின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டு, ஒடுக்கப்பட்ட தமிழ்ச்சமூகங்களுக்கான பிரதிநிதித்துவத்தையும், வாய்ப்பையும் அச்சமூகத்தையே அளவீடாகக் கொண்டு கல்வி, வேலைவாய்ப்புகளில் உறுதிப்படுத்துவதே சமூக நயன்மையாகும். இத்தகைய இடஒதுக்கீட்டுக்கு எத்தகைய சட்டச்சிக்கலும் ஏற்படாதிருக்க, குடி(சாதி)வாரிக்கணக்கெடுப்பை உடனடியாக நடத்தி, சான்றுகளோடும், தரவுகளோடும் அதனை நிலைபெறச் செய்ய வேண்டுமெனவும், அனைத்து தமிழ்ச்சமூகங்களுக்குமான இடஒதுக்கீட்டை மக்கள்தொகைக்கேற்ப பகிர்ந்தளிக்க முன்வர வேண்டுமெனவும் முன்வைக்கப்படும் கோரிக்கையின் நியாயத்தை பரிசீலிக்க வேண்டியதும் பேரவசியமாகிறது.

5 பேருக்கு 50 பேருக்கான உணவைத் தருவதும், 50 பேருக்கு 5 பேருக்கான உணவைத் தருவதும் ஏற்கத்தக்கதுமல்ல; சமூக நயன்மையுமல்ல! அத்தகைய அசமத்துவமானப் போக்கு உருவாகமலிருக்க, குடி(சாதி)வாரிக்கணக்கெடுப்பின் மூலம் சமூகங்களின் மக்கள்தொகையைக் கண்டறிந்து, எண்ணிக்கை விகிதத்திற்கேற்ப அவர்களுக்கான விகிதாச்சாரத்தை வழங்குவதே தகுந்த சட்ட நடவடிக்கையாகும்.

குடி(சாதி)வாரிக்கணக்கெடுப்பின் மூலம் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை நிலைநிறுத்த வேண்டும் என்பதுதான் நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடு,  அதைத் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது. கடந்த தேர்தலில் திமுகவும் அதனைத் தேர்தல் வாக்குறுதியாக அளித்திருந்தது. ஆகவே, அதனை விரைந்து சாத்தியப்படுத்தி வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தைச் சரிவர நிர்மாணிப்பது உகந்த செயலாகும்.

ஆகவே, பீஹாரை போன்று குடி(சாதி)வாரிக்கணக்கெடுப்பை உடனடியாக நடத்திட நடவடிக்கைகள் எடுத்து எல்லா சமூகங்களுக்குமான பிரதிநிதித்துவத்தை மக்கள்தொகைக்கேற்ப சரிசமமாகப் பகிர்ந்தளிக்க முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டுமெனவும், இத்தோடு மொழிவாரிக் கணக்கெடுப்பையும் நடத்தி அதன் முடிவையும் முன்வைக்க வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசை நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

                                                                                                                                              – க. விக்ரம்

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Kaspersky Premium

Champions don't take risks, why should you?