சென்னை:
பத்ம சேஷாத்திரி பள்ளியில் வெளியே குவிந்த மாணவர்களின் பெற்றோர்களால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னை கேகே நகர் பகுதியில் அமைந்துள்ள பத்மா சேஷாத்ரி பள்ளி கோடை விடுமுறைக்கு பின்னர் இன்று திறக்கப்பட்டது.
பத்மா சேஷாத்ரி பள்ளியின் நுழைவு பகுதியில் அமைந்துள்ள கேட்டை முழுமையாக திறக்காமல் ஒரு மாணவர் மட்டுமே உள்ளே செல்லும் அளவிற்கு கேட்டை திறந்துவைத்து மாணவ மாணவிகளை உள்ளே செல்ல அனுமதிப்பதால் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் அவர்களை பள்ளிக்கு அழைத்து வந்த பெற்றோர்களும் 1 முதல் 2 மணி நேரம் பள்ளிக்கு வெளியே காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டது.
அக்னி எனும் கத்திரி வெயில் முடிந்த போதிலும் சென்னையில் வெயிலின் தாக்கம் குறையாத நிலையில் இன்று காலை பத்ம சேஷாத்திரி பள்ளிக்கு வெளியே பல மணி நேரம் காத்திருந்த மாணவர்களில் சிலர் மயங்கி கீழே விழுந்த அவலம் அரங்கேறியுள்ளது.
மேலும் கொரேனா தொற்று என்பது கடந்த சில தினங்களாக தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில் பத்ம சேஷாத்திரி பள்ளிக்கு வெளியே நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் அவர்களது பெற்றோர் குவிந்தது, கொரோனா தொற்றை அதிகரித்து விடுமோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.அதுமட்டுமின்றி பத்ம சேஷாத்திரி பள்ளியில் வெளியே குவிந்த மாணவர்களின் பெற்றோர்களால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் இன்று காலை ஏற்பட்டதன் காரணமாக பணிக்கு செல்பவர்கள் உரிய நேரத்தில் செல்ல முடியாமல் கடும் அவதிக்குள்ளாகினர்.
ஆகவே பத்ம சேஷாத்திரி பள்ளியில் கேட்டை முழுமையாகத் திறந்து மாணவர்கள் உள்ளே செல்ல பள்ளி நிர்வாகம் உரிய நடவடிக்கை இனியாவது எடுக்குமா என பெற்றோர்களின் ஏக்கமாக உள்ளது.
– Geetha Sathya Narayanan