கடலூர்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கார்மாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் அம்பலவாணன் மகன் ஸ்ரீதர். இவர் குறிஞ்சிப்பாடி அருகே பெத்தநாயக்கன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த மதியழகன் மகள் ரம்யா கிருஷ்ணன் (வயது 23) என்ற பெண்ணை காதலித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ரம்யா கிருஷ்ணனுக்கும் ஆண்டிமடம் பகுதியைச் சேர்ந்த இளைஞருக்கும் வருகின்ற 10-ம் தேதி திருமணம் நடக்கப் போவதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, நேற்று ஸ்ரீதர் தன் காதலியான ரம்யா கிருஷ்ணனிடம் கடைசியாக ஒரு முறை பேச வேண்டும் என பாசமாக கூறி அழைத்துள்ளார். அவரும் ஸ்ரீதர் கானச் சென்றுள்ளார்.
ஸ்ரீதர் தன் காதலியைக் கார்மாங்குடி வெள்ளாற்று அருகே தனியாக தனது டூவீலரில் அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது ஸ்ரீதருக்கும் ரம்யா கிருஷ்ணனுக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஸ்ரீதர், ரம்யாகிருஷ்ணனை கொலை செய்யும் நோக்கத்தோடு அவர் பையில் வைத்திருந்த சுத்தியால் தலையில் சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதில் பலத்த காயம் ஏற்பட்ட ரம்யாகிருஷ்ணன் கூச்சலிட்டுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அங்குள்ள வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகள் ஓடி வந்தனர்.
அப்போது முட்புதரில் ரம்யா கிருஷ்ணன் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். அதைக்கண்ட போலீஸார் இதுகுறித்து கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரம்யாகிருஷ்ணனை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் ரம்யாகிருஷ்ணன் மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு, பின்னர் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
பின்னர் போலீஸாரின் தீவிர தேடுதலில் தப்பி ஓடிய காதலன் ஸ்ரீதர் பிடிப்பட்டார். பின்னர் போலீஸாரின் விசாரணையில், காதலி வேறொரு நபருடன் திருமணம் செய்யப் போகிறாள் என்ற விரக்தியில் காதலியை திட்டமிட்டு கொலை செய்யும் நோக்கத்தில் காதலன் ஸ்ரீதர் சுத்தியால் கொலைவெறி தாக்குதல் நடத்தியது தெரிய வந்தது.